தொடரும் பலாலி மக்களின் நில மீட்பு போராட்டம்!

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே தவிர அரசாங்கம் அல்ல என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்களை அறிவித்து வருகின்றார்.

எனினும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்கள், அரசாங்கத்தின் திட்டங்களைத் தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதற்கும் தேவையான ஆளுமையின்றிக் காணப்படுகின்றனர் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தாம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் ஊடாகவும் தமிழ் மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அனுபவமும் அரசியல் ஆளுமையும் முக்கிய பங்காற்றியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தென்னிலங்கையில் யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தமக்கு முக்கியமான விடயமல்ல எனக் குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தமக்குப் போதிய அரசியல் அதிகாரத்தை வழங்கினால், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தமது அரசியல் ஆளுமையின் மூலமாகவும் பல்வேறு விடயங்களைச் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தாம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளதாகவும், அவற்றை மீண்டும் நிரூபிக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.