தமிழர்களை அழிக்கும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது-ரவிகரன்

சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது  என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

மகாவலி எல் என்னும் பெயரில் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து களவிஜயம் செய்ததன் பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கரவெளி எனும் பகுதி அதற்கு அருகில் மணற்கேணி என்ற இடம் அப்பகுதியிலும் காணிகள் அபகரிப்பு நடைபெறுவதாக ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தோம்.

தற்போது அக்கரவெளி பகுதியில் தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகளை மக்கள் சென்று பார்த்த போது வன இலாகாவினுடைய பொறுப்பில் இருந்த காணிகள் மகாவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கிறார்கள்.

11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறு கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி போன்ற ஆறு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஏற்கனவே மகாவலி எல் திணைக்களமானது, மக்களிடம் எத்தனை ஏக்கர் இருந்தாலும் இரண்டு ஏக்கர் வீதம் தான் தரமுடியும் என கூறிய போது தங்களுடைய காணிகள் தங்களுக்கே வேண்டும் என விட்டுக் கொடுக்காது இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது தமிழர்களுடைய பூர்வீக காணிகள், வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட காணிகள் எங்களுக்கோ, மாவட்ட செயலகத்திற்கோ , பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் மகாவலி எல் என்ற அதிகார சபையின் ஊடாக கொழும்பில் உள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாயின் இதனை யாரிடம் முறையிடுவது.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கு சென்று முட்டிக்கொள்வது. இவ்வாறு கொடுமையான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை இலகுவான முறையில் வனவள திணைக்களமானது மாகவலிக்கு விடுவித்து கொடுத்திருக்கின்றது.

மகாவலிக்கு விடுவித்து எங்கோ இருக்கின்ற சிங்கள மக்களுக்கு கொடுக்கின்றது. எங்களுக்கு அருகாமையிலுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 1500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து பெற்று சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்வதாக மக்களாலும், அதிகாரிகளாலும் அறியக்கூடியதாக உள்ளது.

சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என்பதனை சுட்டி காட்டுகின்றோம்.

இதற்கான சரியான தகவல் கிடைத்ததும் ஒரு போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதை கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.