கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – செல்வம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் தற்போது பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும்   செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பல்வேறு உறுதி மொழிகளை மக்களுக்கு வழங்கியது.

மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பி இருந்தார்கள். தற்போது கூட்டமைப்பே பிளவுபட்டு காணப்படுகிறது.இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், தமிழரசுக் கட்சி என்பது ஒரு தாய்க்கட்சியாகும். கட்சி இது தொடர்பில் உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும். மக்கள் எங்களை நம்பியிருக்கிறார்கள்.

சிறியதொரு தேர்தல் ஒன்றுக்காக அவர்கள் பிரிந்து செல்வது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.மக்களின் நம்பிக்கையை தமிழரசு கட்சி இல்லாது செய்துள்ளது. மக்களை புறக்கணித்து பிரிந்து செயற்படுவது தவறானதாகும்.

கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிடும்போது எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகலாம்.  பிரசாரக் கூட்டங்களின்போது வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கூட்டமைப்பை விமர்சித்துப் பேசலாம்.

இவ்வாறு நடக்கும்போது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். வெறுப்பு நிலையை உருவாக்கும். அது மக்களின் கோபத்தை தூண்டும் செயற்பாடாக அமையும்.

இருப்பினும், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு செல்லும்போது சம்பந்தனையோ அல்லது சுமந்திரனையோ விமர்சித்து வாக்குகளை கேட்கப்போவதில்லை. தனிப்பட்ட நபரை வைத்து அரசியலில் நடத்தவேண்டிய தேவை எமக்கு கிடையாது.

மேலும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவோம். மக்களின் திருப்தியை பெற்று, அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எங்களுடைய இலக்காகும்.

ஒருவேளை தேர்தல் நிறுத்தப்பட்டால் எங்களுடைய நிலை என்ன? அதன் பின் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதை சிந்திக்கவில்லை. நாம் ஒற்றுமையாக பயணிப்பதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் எங்களுடைய எந்தவொரு அரசியல் பயணத்திலும் இந்தியாவின் மத்தியஸ்தம் தேவைப்படுகிறது.

இந்தியாவை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை மற்றும் எங்களுடைய மக்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளை உடனடியாக தட்டிக்கேட்கின்ற செயற்பாடுகளாக இருக்கட்டும்… அனைத்திலும் இந்தியாவின் தலையீடு எமக்கு தேவைப்படுகிறது. அதனூடாக எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்றார்