தமிழ் மக்களைப் பொறுத்தவரை மனிதப் புதைகுழிகள் ஒரு தொடர்கதையாக தொடர்வதாகவும், அந்தத் தொடர்கதை செம்மணியில் தொடங்கி கொக்குத்தொடுவாய்வரை நீண்டு செல்வதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த மனிதப் புதைகுழிகளுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், இனியும் நாம் நீதிக்காகக் காத்திருக்க முடியாது. சர்வதேசம் இனியும் எம்மை வஞ்சிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஐக்கிய நாடுகள் சபை போன்ற பெரு மன்றங்களும், சர்வதேச நாடுகளும் காலதாமதமின்றி உடனடியாக ஈழத்திலே அரங்கேறிய இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை ஆரம்பிக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் அழைப்பினை ஏற்று முல்லைத்தீவிலே திரண்டிருக்கின்றோம்.
வடகிழக்கு ஸ்தம்பித்து, ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு மாபெரும் பேரணி முல்லை மண்ணிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகழிக்கு உடனடியாகக் காலதாமதமின்றி, சர்வதேச மேற்பார்வையுடன், சர்வதேச தராதரத்தில், சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் உடனடியாக அகழ்வுப்பணிகளைத் தொடரவேண்டுமெனக் கூறுகின்றோம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை புதைகுழிகள் ஒரு தொடர்கதையாக, வரலாறாகக் காணப்படுகின்றது.
செம்மணி தொடங்கி கொக்குத்தொடுவாய்வரை அந்த மனிதப் புதைகுழியின் தொடர்கதை நீள்கின்றது. இருப்பினும் இவற்றுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை.
இனியும் நாம் நீதிக்காகக் காத்திருக்க முடியாது. சர்வதேசம் இனியும் எம்மை வஞ்சிக்கக்கூடாது.
ஐக்கிய நாடுகள் சபை போன்ற பெரு மன்றங்களும், சர்வதேச நாடுகளும் காலதாமதமின்றி உடனடியாக ஈழத்திலே அரங்கேறிய இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை ஆரம்பிக்கவேண்டுமெனக் கோரி நிற்கின்றோம்.
அதற்கு முதற்கண் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச கண்காணிப்போடு, சர்வதேச நிபுணர்களுடைய மேற்பார்வையில் உடனடியாக அகழ்வுப் பணிகள் தொடரவேண்டுமெனக் கோரி நிற்கின்றோம்.
எம்மைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய கோரிக்கை நியாயமானது. இது அவர்களுடைய கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர் தாயகத்தினுடைய வேண்டுதலாகவும் இருக்கிறது என்றார்.