‘டித்வா’ புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த நவம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொது அவசரகாலச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் தற்போதைய பேரிடர் நிலைமைக்குப் பொருத்தமற்றவை என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலொன்றில் பங்குபற்றியபோது இதனைத் தெரிவித்த அவர், புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அபாயங்களை நிர்வகிக்க அவசரகால நிலை அவசியமென கருதினாலும், வெளியிடப்பட்டுள்ள சட்டம் கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அவசரகாலச் சட்டம், முன்னைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட விரிவான ஏற்பாடுகளைப் பிரதிபலிப்பதாகவும் , பேரிடர் முகாமைத்துவம் அல்லது மீள்கட்டமைப்புடன் தொடர்பில்லாத பரந்த அதிகாரங்களை வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டத்தின் பெரும்பாலான விதிமுறைகள் குற்றவியல் செயல்களுடன் தொடர்புடையவையாக இருப்பது, அதன் பொருத்தப்பாடு மற்றும் தேவை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டத்தின் சில குற்றப்பிரிவுகள் முந்தைய அவசரகாலச் சட்டங்களில் இருந்ததைப் போலவே, அளவுக்கு மீறிய மற்றும் நியாயமற்ற பிரிவுகளுடன் ஒத்துப் போகின்றன என்பதுடன், முந்தைய விதிமுறைகளின் பகுதிகள் நேரடியாகப் பிரதியெடுக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவசரகால நிலை முற்றிலும் பேரிடர் முகாமைத்துவத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


