யாழ் வரும் ஜனாதிபதி இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : கடற்றொழிலாளர் சமாசம் கோரிக்கை

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடபகுதி மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினையான இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்க்கமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என அகில இலங்கை கடற்தொழில் மற்றும் கமத்தொழில் சமாசம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி. சுப்பிரமணியம் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

“எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் வெறும் நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்ளாமல், இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எமது மீனவப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

தற்போது பருத்தித்துறை உள்ளிட்ட வடபகுதி கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை மடிப் படகுகள் கரைக்கு மிக அண்மித்த பகுதி வரை வந்து சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

இதனால் எமது மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் சேதமடைவதுடன், எமது கடல் வளமும் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பலமுறை ஜனாதிபதிகள் மற்றும் இந்திய தூதுவர்களிடம் மகஜர் அளித்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், வடபகுதி மீனவர்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எங்களைச் சந்தித்துப் பேச இதுவரை அவர் சந்தர்ப்பம் வழங்கவில்லை. இது இந்தியாவின் அழுத்தம் காரணமாகவா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்களுக்கு இதுவரை எவ்வித அரச நிவாரணங்களும் கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்தபோது நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இந்த விஜயத்தின் போதாவது ஜனாதிபதி மீனவர்களைச் சந்தித்து, அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.