சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கையில்,
“சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் மகிந்த ராபஜக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஸ்தாபக தலைவர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்படும்.
எனினும், கட்சியின் கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக கட்சியின் அங்கத்தவர்கள் கருத்து வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ச்சியாக சில உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றமை தொடர்பிலும் தீர்மானங்கள் எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இதேபோன்று, ஜனாதிபதி ரணிலுக்கும் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையை அடுத்து அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் செயல்பாடுகள் சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
