உலகளவில் பெரிதும் தேடப்பட்டு வந்த மனித கடத்தல் கும்பல் தலைவன் கைது- இன்டர்போல்

ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மக்களை கடத்தியதில் குற்றவாளியாக அறியப்பட்ட மனித கடத்தல்காரரான ஜகாரியாஸ் ஹேப்டேமரியம் எனும் எரித்திரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகமும் சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், கடந்த ஜனவரி 1ம் திகதி சூடானில் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு முதல் இன்டர்போல் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கிழக்கு ஆப்பிரிக்க குடியேறிகளை கடத்தி, தவறாக நடத்தி, அவர்களை மிரட்டி பணிப் பறிக்கும் அமைப்பினை இந்நபர் நடத்தி வந்திருக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு எத்தியோப்பியாவில் கைது செய்யப்பட்ட ஹேப்டேமரியம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மனித கடத்தலில் ஈடுபட்டதற்காக எத்தியோப்பிய நீதிமன்றம் இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

லிபியாவில் உள்ள கிடங்குகளில் அகதிகள் மற்றும் குடியேறிகளை சிறைவைத்து அவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் ஆயிரக்கணக்கான டாலர்களை பறித்ததாக ஹேப்டேமரியம் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

“உலகின் மிக மோசமான மற்றும் கொடூரமான மனித கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்,” எனக் கூறும் நெதர்லாந்து ‘அந்நபரை தேடப்படுபவர்களின் பட்டியலில்’ வைத்திருக்கிறது. நெதர்லாந்து அதிகாரிகளின் தரவுப்படி, ஹேப்டேமரியம் லிபியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமை நடத்தி வந்திருக்கிறார். அம்முகாமில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக வைத்து, அடித்து, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற மக்களின் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அம்மக்களை மனித கடத்தல்காரரான ஹேப்டேமரியம் சுரண்டியதாக சொல்லப்படுகிறது.

இந்த நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து குடியேறிகளை லிபியாவுக்கு அழைத்துச் சென்ற வழி முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியான சையத் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்க குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய கரைகளில் தஞ்சமடைவதற்கு முக்கிய இணைப்பு நாடாக லிபியா உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.