இந்திய கடற்படை சந்தித்த பேரிழப்பு-  வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் பல்நோக்கு தாக்குதல் பிரிகேற் வகை போர்க்கப்பல் கடந்த ஞாயிற்றுக் கிழமை(21) மும்பாயில் உள்ள கடற்படைத் துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த பின்னர் கடலில் மூழ்கியுள்ளது.

ஐ.என்.எஸ் பிரமபுத்ரா என்ற கப்பல் பாராமரிப்பு மற்றும் தரமுயர்த்தும் பணிகளுக்காக மும்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் காணாமல்போயிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தை கடற்படையினர் அணைத்தபோதும் தீயை அணைப்பதற்கு பயன்படுத்திய அதிகளவான நீரினால் கப்பலின் சமநிலை தவறியதால் கப்பல் சரிந்து வீழ்ந்து கடலில் மூழ்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தாக்குதல் கப்பலான பிரமபுத்ராவின் விபத்து தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது இந்திய அரசு.

இந்தியாவின் Garden Reach Shipbuilders and Engineers Limited என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்ட இந்த 3,850 தொன் எடை கொண்ட கப்பல் 6,000 கோடி ரூபாய்கள் பெறுமதியானதுடன் 2000 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வகை 3 கப்பல்களை இந்தியா கட்டியிருந்தது. நடுத்தர மற்றும் குறுந்தூர ஏவுகணைகள், வான் பாதுகாப்பு பீரங்கிகள், தரை மற்றும் கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள். கடற்படைக் கப்பல்களைத் தாக்கும் ரோபிடோ வகை ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கொண்ட இந்த முன்னரங்கு தாக்குதல் பிரிகேற் வகை கப்பலில் 40 அதிகாரிகள் உட்பட 450 கடற் படையினர் பணியாற்றுகின்றனர்.

மும்பாய் துறைமுகத்தில் இந்திய கடற் படையினர் சந்தித்த மூன்றாவது மிகப்பெரும் இழப்பு இதுவாகும். 2013 ஆம் ஆண்டு ஐ.என்.எஸ் சிந்துராக்சாக் என்ற ரஸ்யத் தயாரிப்பான டீசலில் இயங்கும் நீர்மூழக்கிக்கப்பல் ஒன்றும் வெடித்துச் சிதறியிருந்தது. இந்த சம்பவத்தில் 3 அதிகாரிகள் உட்பட 18 கடற்படையினர் கொல்லப்பட்டிருந்தனர். தவறான செயல்முறை களே இதற்கு காரணம் என கடற்படையினர் விசாரணையின் பின்னர் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் 2016 ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தில் பாரமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப பட்டிருந்த பிரமபுத்ரா வகையை சேர்ந்த பெற்வா என்ற பிரிகேற் கப்பல் கடலில் மூழ்கியதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர்.  அமெரிக்க கடற்படை யினருடன் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் நான்கு மாதங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் 20 கோடி ரூபாய்கள் செலவில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த கப்பல் திருத்தப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது.

தற்போது மூழ்கிய பிரமபுத்ரா என்ற கப்பலை கடலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கே 25 கோடி ரூபாய்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன் திருத்தப் பணிகளுக்கு இதனைவிட பல மங்கு பணம் செலவாகும்.

இந்த வகை கப்பல்களின் இழப்புக்கள் என்பது இந்தியாவால் உடனடியாக ஈடுசெய்ய முடியாதவை அதனை ஈடுசெய்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். 11 வருடங்களில் ஒரே துறைமுகத்தில் 3 முக்கிய கப்பல்களை இந்தியாவின் கடற்படை இழந்தது என்பது விபத்தாக பார்க்க முடியாது என தெரிவிக்கின்றனர் சில ஆய்வாளர்கள். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் 40 இற்கு மேற்பட்ட விபத்துக்களை சந்தித்துள்ளது.

இதனிடையே கப்பலில் வெடிப்பதிர்வு கேட்டதாகவும் கூறப்படுகின்றது. கப்பல் அதில் உள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுடன் தான் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. ஆயுதப்பகுதியில் தான் தீ முதலில் பரவியதாக கூறப்படுகின்றது.

கே.எச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வெடித்தாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த ஏவுகணை வெடித்திருந்தால் கப்பல் முற்றாக அழிந்திருக்கவே வாய்ப்புக்கள் உள்ளது. அதாவது திருத்த முடியாது. கப்பல் மூழ்கிய பின்னர் துறைமுகத்தில் பணியாற்றிய வேற்று நாட்டவர் கள் சிலர் காணாமல் போயிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கப்பலின் பிரதான கட்டளைத் தளம் நொருங்கியுள்ளதால் கப்பலை திருத்துவது கடினம் எனவும் கூறப்படுகின்றது. கப்பல் மூழ்கியுள்ள நிலையை பார்க்கும்போது அதனை மீட்பதும் கடினம் என்றே கருதப்படுகின்றது.

இந்தியாவிடம் உள்ள பிரிகேற் வகை கப்பல்களில் தற்போது மூழ்கிய கப்பலே  மிகவும் சிறந்ததாகும். அது கே.எச் 35 வகையை சேர்ந்த 16 ஏவகணைகளையும், பராக் -1 வகையை சேர்ந்த 24 விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், 324 மி.மீ ரோப்பிடோ ஓ.ரி.ஓ மெலறா துப்பாக்கிககள், இரண்டு சி கிங் வகை உலங்குவானூர்திகள் இறங்கும் தளத்தையும் கொண்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திருப்பதி துறைமுகத்திற்கு உடனடியாக சென்று விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்ரேல் – லெபனான் போரின் போது மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த இந்தியா, இலங்கை, மாலைதீவு, நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்க இந்தியா மேற்கொண்ட சூக்கொன் என்ற படை நடவடிக்கையில் சக்தி என்ற மீட்புக் கப்பலுக்கு பாதுகாப்பாக பிரமபுத்ரா, பெற்வா மற்றும் மும்பாய் ஆகிய பிரிகேற் கப்பல்கள் சென்றிருந்தன.

பெற்வா கப்பல் 1998 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது. பிரமபுத்ரா 1994 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 7 ஆம் நாள் ஈரானின் பன்டார் அபாஸ் கடற்பகுதியில் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஈரான் கடற்படையின் சஹான்ட் வகை பிரிகேற் கப்பலும் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கியிருந்தது. இந்த சம்பவத்தில் இரு கடற்படையினர் கொல்லப் பட்டிருந்தனர். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் பணியில் ஈடுபடவிருந்த சமயம் இந்த அனர்த்தம் நிகழ்ந் திருந்தது.

ஈரானிய கடற்படையில் உள்ள நவீன கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்று. ஈரானின் தொழில்நுட்பத்தில் உருவான இந்த கப்பல் 2021 ஆம் ஆண்டு ரஸ்ய கடற்படைக் கப்பல்களுடன் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தது. ஏ.ஈ.எஸ்.ஏ வகை ரடார்கள், 8 வான்பாதுகாப்பு இடைத்தூர வீச்சுக் கொண்ட ஏவுகணைகள், கப்பல்களை தகர்க்கும் ஏவுகணைகள் என்பன இந்த கப்பலின் சிறப்பு அம்சமாகும்.

2018 ஆம் ஆண்டு இதேவகை பிரிகேற் கப்பல் ஒன்று துறைமுகத்தில் மூழ்கியிருந்தது. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு ஈரான் கடற்படை யின் இரண்டாவது மிகப்பெரும் கப்பலும் ஓமான் வளைகுடாவில் தீப்பிடித்து மூழ்கியிருந்தது. மேலும் ஒரு பிரிகேற் வகை கப்பல் 2021 ஆம் ஆண்டு பன்டர் அபாஸ் துறைமுகத்தில் மூழ்கியிருந்தது.

மீண்டும் ஒரு பனிப்போர் காலத்திற்குள் உலகம் மெல்ல மெல்ல நுளைந்துவருகையில் இரு துருவங்களாக மாற்றம் பெற்றுள்ள வடக்கு மற்றும் தெற்கு மண்டல நாடுகளின் தொகுதியைச் சேர்ந்த நாடுகள் ஒருவரின் பலத்தை மற்றயவர்கள் அழிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

உக்ரைன் போரை காரணமாக்கி உக்ரைன் படை யினருக்கு கடற்படைக் கப்பல்களைத் தாக்கும் நவீன ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவரும் நேட்டோ கூட்டமைப்பு ரஸ்யாவின் கருங்கடல் கடற்படையின் கப்பல் களை தொடர்ந்து குறிவைத்து வருகின்றது.

கருங்கடல் கடற்படைப்பிரிவின் கொடிக்கப்பலான மொஸ்கோவா கப்பலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பு ஈரானுக்குள் வைத்து ஈரானின் கடற்படை கப்பல்களை குறிவைத்து வருகின்றது.

அதேசமயம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரஸ்யாவுக்கு சென்று வெசிங்டனில் இடம்பெற்ற நேட்டோவின் 75 ஆவது மாநட்டின் நோக்கத்தை சிதறடித்துள்ள நிலையில் இந்திய கடற்படை மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.