வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வடக்கு கிழக்கினை சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வகையிலான நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,
இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் மாறிமாறி இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்களினால் பல வழிகளில் அடிமைகளாக்கப்பட்டிருந்தார்கள்.
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணமாகயிருந்ததை இன்று பேரினவாதிகள் குடியேற்றங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கல் மூலமாகவும் கிழக்கு மாகாணத்தை சிங்கள பௌத்தமயமாக்கிவருகின்றனர், மாற்றமுற்படுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான தொல்பொருள் செயலணியை உருவாக்கியிருந்தார்கள்.11பேர் கொண்ட அந்த குழுவில் பௌத்தமதகுருமார்களும், ஓய்வுபெற்ற பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்பட்டு தொல்பொருள் என்ற ரீதியில் பல இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டன.
இதுபோன்று பல இடங்களில் தொல்பொருள் என்ற பெயரில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.வடமாகாணத்தில் வெடுக்குநாறி மலை,குருந்தூர்மலை போன்ற இடங்களில் பௌத்ததினை திணிப்பதற்காக விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அதுமட்டுமன்றி திருகோணமலையில் பாடல்பெற்ற தலமான கோணேஸ்வரத்தையும் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சிப்பதுடன் கன்னியா வெந்நீரூற்றில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இலண்டனில் இருபதுக்கு மேற்பட்ட சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவராக இங்குவந்துள்ள இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவர் மு.கோபாலகிருஸ்ணன் அவர்கள் இருந்துகொண்டு அனைத்து சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து பௌத்தமயமாக்கலுக்கு எதிராக கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவேண்டுமாகயிருந்தால்,இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிசெய்யவேண்டுமானால் தொல்பொருள் திணைக்களம் ஊடாக சைவ ஆலயங்களை அழித்து பௌத்த ஆலயங்கள் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று குரல்கொடுத்ததுமட்டுமன்றி எமது உரிமைகளுக்காக நாங்கள் நடாத்தும்போராட்டங்களுக்கு அவரது தலைமையில் கைகொடுத்துக்கொண்டிருக்கின்றார்.