முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் – வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக  கைவிட வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது  கடந்த நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கான கருவியாக பயன்பட்டு வருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச  அழுத்தங்களுக்காகவும் இன்னும் இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான  மக்கள் குரலை அடக்கும்முகமாகவும் இலங்கை அரசாங்கம் தற்போது  பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட மூலத்தினை முன்மொழிந்து 2023 மார்ச் 17 மற்றும்  2023 மார்ச் 22 ஆகிய இரு தினங்களும் உத்தியோகபூர்வ அரசாங்க வர்த்தமானியில்  வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்தினை  பதிலீடு செய்யும் நோக்கத்திற்காக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமானது இ ஜனநாயக விழுமியங்களையும் சர்வதேச மனித உரிமை  நியமங் களையும் குழிதோண்டிப் புதைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாத  எதிர்ப்புச் சட்ட மூலத்தினை இப்போதில்லாவிடில் எப்போதும் எதிர்க்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதனால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த  அரக்கத் தனமான சட்டத்திற்கெதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட் டமானது ஏன் எதிர்க்கப்படவேண்டும்

ஏனெனில், இச்சட்டத்தில் “பயங்கரவாதம்” என்பதன் வரைவிலக்கணம் மக்களின் நியாயமான  மனித உரிமைகளை மறுக்கும் தடைசெய்யும் நோக்கோடு  வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாட்டின் மக்கள் எவரும்  சுதந்திரமான முறையில் ஒன்று கூடுதலும், கருத்துத் தெரிவிப்பதும் அரசின்  நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், உரிமைகளுக்காக சட்டரீதியாக  முறைகளில் போராடுவதும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஏற்படுவதும் கூட  பயங்கரவாதம் என வரைவிலக கணப்படுத்த முடியும்.

நீதித்துறை மேற்பார்வை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

∙ பொலிசாருக்கும் அரசின் நிறைவேற்றுத்துறை அதிகாரிகளுக்கும் உச்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீதவானின் மேற்பார்வையின்றி தடுப்புக்காவலுக்கான உத்தரவை நாட்டிலுள்ள எந்தவொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வழங்க முடியும்.

எந்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் நீதிமன்றத்தில் இருந்து தடையுத்தரவுக்ளைப் பெற்றுக்கொள்ள முடியும். பாராளுமன்ற மேற்பார்வையோ நீதித்துறை மேற்பார்வையோ இன்றி ஜனாதிபதிக்கு சட்டங்களை ஆக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை.

∙ ஜனாதிபதி தனது நம்பிக்கையின் அடிப்படையில் எந்தவொரு அமைப்பினையும்  தடை செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை.

∙ பொலிசார் அசையும் சொத்துக்களை தன்னிச்சையாக 3 நாட்களுக்குக் கைப்பற்றி பின்னர் குறித்த தடுப்பினை மேலும் 90 நாடகளுக்கு நீட்டிக்குமாறு நீதவானைக் கோர முடியும். எந்தவொரு நபரையும் குற்றவாளி எனக் காண்பதற்கு முன்னரே புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குரிய அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளமை.கைது மற்றும் தேடுதலுக்கு இராணுவத்தைப் பயன்படுத்த முடியும். மரண தண்டனை விதிக்கப்பட முடியும்.

கடந்த காலத்தில் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை மீறல்களை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நோக்கத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அதனைவிட கொடிய சட்டத்தினை இலங்கை அரசாங்கம் முன்  மொழிந்திருக்கின்றது.

ஏற்கனவேயுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இலங்கை  அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மட்டுமன்றி, ஈஸ்ரர் குண்டுத்தாக்கலின் பின் முஸ்லிம் மக்கள் மீதும் இறுதியாக அரகலய மக்கள் எழுச்சியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள்,  மதகுருமார்கள் மீதும் தனது கோரக்கரங்களின் பிடியை இறுக்கி பிடித்தொயருந்தது.

இச்சட்ட  மூலமானது சட்டமாக்கப்பட்டால் மக்கள் இலங்கையின் அரசியல் அமைப்பில்  உத்தரவாதமளிக்கப்பட்ட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு  நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியினதும் அவரது நிறைவேற்றுத்துறை  அதிகாரிகளினதும் எதேச்சாதிகாரமிக்க சர்வாதிகார ஆட்சிக்குள் நசியவேண்டிய நிலை  ஏற்படும்.

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு காரணமான பயங்கரவாத  தடைச்சட்டமானது இன்னொரு முகமூடியில் மேலும் பலம் கொண்டு வருவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசினால் சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை கேலிக்குள்ளாக்கி தற்போது கொண்டுவரவுள்ள  பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கெதிரான மக்கள் எதிர்ப்பையும் எழுச்சியையும்  வெளிப்படுத்துவதற்காக இன்றைய தினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் சார்பில்  மேற்கொள்கிறோம்.

இன்றைய தினம் (20) மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசிடம் பின்வருவம்  விடயங்களை அறிக்கையிடுகிறோம்.

∙ முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக  கைவிட வேண்டும்.

∙ தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக  நீக்கப்படல் வேண்டும்.

∙ பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக உரிய ஏற்பாடுகைள ஏற்கனவேயுள்ள சட்டங்களில் உட்புகுத்துவதை அல்லது சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இசைவானதொரு சட்டத்தினை இயற்றுவதை அரசு  பரிசீலிக்க வேண்டும்.

புதிய சட்டமானத மனித உரிமை நியமங்களுக்கும்  ஏற்கனவேயுள்ள சட்டங்களுக்கும் அமைவானதாகவிருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றுள்ளது.