இலங்கையில் சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கான இடைவெளி சுருக்கமடைந்து வருகின்றமைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் குரலை அடக்கும் வகையில் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தற்போது அமைதிப்போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்குமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக இல்லாதொழிக்கவேண்டியது அவசியமாகும்.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவை பூர்த்திசெய்யப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக மாத்திரம் அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக் கப்பட்டிருப்பதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு அதிருப்தியளிக்கக்கூடியவகையில் தமது பணியை முன்னெடுத்த ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என்போர் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கவாதிகளும்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்துக்களை வெளியிடல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும், அதனுடன் நெருங்கிய கட்டமைப்புக்களும் அவதூறு பிரசாரங்கள், கடத்தல் பாணியிலான கைதுகள், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கைகள், பயணத்தடைகள், இடமாற்றங்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளன.

மேலும் இலங்கை ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘பாசிஸவாதிகள்’ என்றும் அழைத்ததன் மூலம் போராட்ட இயக்கங்களை மிகமோசமானதாகச் சித்தரிக்க முற்பட்டனர்.

அத்தோடு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்கள் மூவருக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பிரயோகித்தது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு உள்ளாவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பெரும் எண்ணிக்கையான தன்னிச்சையான தடுத்துவைப்புக்கள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிகோலியுள்ளது.

அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் பலமுறை வாக்குறுதியளித்துள்ள போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி ஒருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.