பிரபாகரன் இன்றில்லை என்ற ஆதங்கம் இலங்கை மக்களில் எதிரொலிக்கின்றது | வி.இராதாகிருஷ்ணன்

303 Views

இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன. ஆட்சிப்பீடமேறுபவர்கள் வீணே வாக்குறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாது அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். இலங்கையின் வரலாற்றில் சமகால இளைஞர்களின் போராட்டம் முக்கியத்துவம் மிக்கதாகும். இப்போராட்டத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டடு இந்நாட்டில் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதேவேளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நாம் பல்வேறு விடயங்களை அவருடன் பேசித் தீர்த்திருக்கலாம் என்று கூட நாட்டு மக்கள் இப்போது ஆதங்கப்படுகின்றனர் என்று இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்னும் அரசியல் கட்சியின் உபதலைவருமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

            அவர் தொடர்ந்தும் தனது நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,

சமகாலத்தில் இலங்கை இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றது. நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அரை வயிறும் கால் வயிறுமாக அவர்கள் உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் சகல துறைகளும் தேக்க நிலையை அடைந்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கம் நாட்டு மக்களை நடுத்தெருவில் தள்ளி இருக்கின்றது. முச்சக்கர வண்டி சாரதிகள், பஸ் நடத்துனர்கள், நாட் கூலித்தொழில் புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று பொருளாதார சிக்கலால் விழிபிதுங்கி போயுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் வாழ்க்கையினை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சுமார் பதினெட்டு பேர் வரையில் வரிசைகளில் மயங்கி விழுந்து உயிரிழந்த கொடூரமும் இலங்கையில் அரங்கேறி இருக்கின்றது. இது ஆசியாவின் ஆச்சரியமாகும். எரிபொருள், எரிவாயு, பால்மா, மருந்து வகைகள் என்பவற்றுக்கான தட்டுப்பாடு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஊழியர்கள் தொழிலுக்காக செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.

நிரந்தர வருமானத்தைக் கொண்டுள்ள அரச ஊழியர்களும் விலைவாசி அதிகரிப்புக்கு மத்தியில் நிலைகுலைந்து போயுள்ளனர். எனினும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல்  அரசியல் ஆதிக்க வெறியினை மையப்படுத்திச் செயற்பட்ட ராஜபக்ச ஆட்சியாளர்கள் இன்று தோல்வியைத் தழுவி இருக்கின்றார்கள். உலக நாடுகள் ஊழல் பேர்வழிகளான அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு தயாராக இல்லை.

நாட்டு மக்கள் இன்று சகல துறைகளிலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். உரிமை சார்ந்த பிரச்சினைகளும் இவற்றுள் உள்ளடங்கும். இவற்றுக்கு ஸ்திரமான அரசாங்கத்தின் ஊடாக உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முற்படுதல் வேண்டும். இதேவேளை ஏனைய இனத்தவர்களைக் காட்டிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். நிலவுரிமை மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது போன்ற பலவும் காணப்படுகின்றன. அத்தோடு மலையக மக்களும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவற்றுக்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் காணியுரிமை, வீட்டுரிமை என்பவற்றுக்கான அடித்தளமும் இடப்படுதல் வேண்டும். அரச தொழில் வாய்ப்புகளில் மலையக இளைஞர்கள் அதிகமாக உள்ளீர்க்கப்படுவதோடு பின்தங்கிய இச்சமூகத்தின் அபிவிருத்தி கருதி விசேட உதவிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவும் வேண்டும். எவ்வாறெனினும் நாட்டினுடைய சமகால பிரச்சினைகளுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைக்கப்படுதல் வேண்டும்.

நாட்டில் இன்னும் உரிய அரசியல் சூழல் கட்டியெழுப்பப்படவில்லை. இந்நிலையில் பிரச்சினைக்கான தீர்வினை யாரிடம் கேட்பது? கோரிக்கைகளை யாரிடம்  முன்வைப்பது?  என்ற கேள்வி மேலோங்குகின்றது. எனவே முதலில் இவற்றுக்கான விடை காணப்படுதல் வேண்டும். பொதுத்தேர்தல் விரைவில் நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவாகும் வரை பிரச்சினைகளுக்கும் முடிவிருக்காது தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் இளைஞர்களின் அண்மைய எழுச்சி தொடர்பில் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருவது ஒரு சிறப்பம்சமாகும். இளைஞர்கள் காலி முகத்திடலில் புதிய அத்தியாயத்தை எழுதப் புறப்பட்டிருக்கின்றனர். ஊழலற்ற, ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. பாராளுமன்றத்தில் தீர்வுகாண முடியாத பிரச்சினைகளுக்குக் கூட இளைஞர் எழுச்சி தீர்வினைப்  பெற்றுக் கொடுத்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். ராஜபக்சாக்கள் இளைஞர் எழுச்சியினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற  பெரும்பான்மைத்துவம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. இதேவேளை இளைஞர்கள் இனவாதத்திற்கும் சாவுமணி அடித்திருக்கின்றார்கள். இலங்கை இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் பெயர்போன நாடு. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னராயினும் சரி அல்லது அதன் பின்னராயினும் சரி இலங்கையில் இனவாதத்துக்கு பஞ்சம் இருக்கவில்லை. இனவாதத்தால் நாடு பல்வேறு துன்ப துயரங்களையும், தோல்விகளையும் சந்தித்தபோதும் சில இனவாதிகள் இன்னும் திருந்துவதாக இல்லை. இந்நிலையில் இளைஞர்களின் எழுச்சி இனவாதத்தை பின்தள்ளி இருக்கின்றது. சகல இனத்து மக்களும் மதகுருமார்களும் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை இலங்கையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு விடயமேயாகும். தமிழ், முஸ்லிம், சிங்கள இன மக்களின் ஐக்கிய உணர்வு போராட்டத்தில் எதிரொலித்தது. போராட்டத்தின் வெற்றிக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் வேண்டப்பட்ட நிலையில்” இலங்கையர்” என்ற பொது வரையறையை வலுப்படுத்துவதாகவே போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

நாட்டின் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நாம் பல்வேறு விடயங்களை அவருடன் பேசித் தீர்த்திருக்கலாம் என்று கூட நாட்டு மக்கள் இப்போது ஆதங்கப்படுகின்றனர். அந்தளவுக்கு நாட்டு மக்களிடையே ஒரு மனநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாட்டு மக்கள் இப்போது கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கையின் துயர் துடைப்பதில் இந்தியா இப்போது காத்திரமான பங்களிப்பினை செய்து வருகின்றது.  இந்தியா இல்லாவிட்டால் இலங்கையர்களுக்கு சாப்பாடே கிடையாது. அந்தளவுக்கு இலங்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை எட்டவேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்போது பதில் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில் இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த பொதுத்தேர்தலில் ரணில் குறைந்தளவு வாக்குகளைப் பெற்று தனது தொகுதியில் படுதோல்வியைத் தழுவிய ஒருவர். இத்தகைய ஒருவர் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக உள்வாங்கப்பட்டு பிரதமராகவும், தற்போது நாட்டின் பதில் ஜனாதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றிருக்கின்றார். இது ஜனநாயகத்துக்கு முரணான ஒரு செயலாகும். அரசியலமைப்பின்படி பிரதமர் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் என்றிருந்தபோதும் இங்கு ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டிருப்பதனை அல்லது மழுங்கடிக்கப்பட்டிருப்பதனையே எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய போக்குகள் இலங்கை அரசியலில் இருந்தும் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். என்றார்.

நேர்கண்டவர்: துரைசாமி நடராஜா

Leave a Reply