இந்தியாவைப் போன்று எந்த நாடும் இலங்கைக்கு  உதவியை  வழங்கியதில்லை- எஸ். ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், வேறு எந்தவொரு நாடும் இந்தியா செய்து வருவது போன்ற உதவியை இலங்கைக்கு வழங்கியதில்லை என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்நும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள நாடு இலங்கை என்பதால் அங்கு ஏற்படும் விளைவு குறித்து இயல்பாகவே இந்தியா கவலை கொண்டுள்ளது என்றும் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய பாராளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு, எம்.எம். அப்துல்லா (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கேசவ ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி) விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.