‘நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதால் பொருளாதாரம் மாற்றம் பெறாது’ என்றும் ‘அவ்வாறு நினைக்க முடியாது’ என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘பொருளாதாரத்தை கட்டமைக்க அனைத்து துறைகளும் மீள் எழுச்சி செய்யப்படுவது அவசியமாகும்’ என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
‘மக்களுடைய காணி நிலங்கள் மக்களுக்குரியவையாகும்’. ‘அதேநேரம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினை அல்லது தேவைப்பாடுகள் வந்தால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிலங்களை சுவீகரிப்பதும் அரசுக்கு அவசியமானது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘இராணுவத்தினர் தமது தேவைக்காக வைத்துக்கொண்டுள்ள காணி நிலங்களை விடுவிக்கப்பட வேண்டும் என கோரப்படுகின்றது’. ‘அவசிய தேவைகள் குறிப்பாக அந்தக் காணிகளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்ட திட்ட வரைபை முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் கருத்திற் கொள்ள முடியும்’ என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது’
‘ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியாக படிப்படியாகவே தீர்வை காண முடியும்’ என்றும், அவசரப்பட்டு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்றும்’ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘கடந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவை மீறி தையிட்டியில் விகாரை கட்டப்பட்டது’ என்றும் ‘இது எதுவிதத்திலும் இன நல்லிணக்கத்துக்கோ மாற்றத்துக்கோ ஏற்றதல்ல’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.