பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைந்து வரும் கிழக்கு மாகாணம்-மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் நிலைமையென்பது மிகவும் கவலைக்குரியதாகவேயிருந்து வருகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் தமிழர்களின் பொருளாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வளங்கள் உள்ளபோதிலும் அதனை பயன்படுத்துவதற்கான பொருளாதார வளம் இல்லாத காரணத்தினால் அந்த வளங்கள் வீண்விரயமாவதுடன் மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக காணப்படும் விவசாயதுறையினைக்கூட முழுமையாக கட்டியெழுப்பமுடியாத நிலையிலேயே இன்று கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு செயற்பாடுகளானது பல்வேறு வழிகளிலும் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் அதனை தடுப்பதற்கு எந்தவித திராணியும் அற்றவர்களாக இன்று கிழக்கில் தமிழ் தேசியம் வாழ்ந்துவருகின்றது என்பதே கவலைக்குரியதாகும்.

கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டிய அவசியம் இருப்பதன் காரணமாக கிழக்கில் பறிபோகும் தமிழர்களின் காணிகள் தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக எழுதிவருகின்றோம்.கிழக்கில் காணிகள் என்பது வளமான காணியாகவும் தமிழர்கள் பண்டைய காலம் தொடக்கம் வளப்படுத்திய காணிகளாகவும் உள்ளதன் காரணமாக இதன்மீதான ஈர்ப்பு என்பது தென்னிலங்கையில் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணிகளை அபரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெரும்பான்மையினத் தவர்களினால் நேரடியாக அபகரிக்கப்படும் காணிகள் ஒருபுறம் மறுபுறம் கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு வளமான காணிகளை பெரும்பான்மையினத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒருபுறம் என கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்பு பல்வேறு வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதியானது திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியாக காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் வாகரையானது கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த பகுதியாகவும் வடகிழக்குக்கு இணைப்பின் மையமாகவும் காணப்பட்டது.அதற்கு காரணம் அந்த பிரதேசத்தின் இடஅமைவு மற்றும் அங்கு காணப்படும் இயற்கை வளங்களாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி மற்றும் ஊரியன் கட்டு ஆகிய கிராம சேவகர் பிரிவில் 56 குடும்பங்களின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படையின் 233 ஆவது பிரிவு, மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டுள்ளது.
இதேபோன்று வாகரை மாங்கேணி பகுதியில் சுமார் 800ஏக்கர் காணிகள் அபரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டு பாரியளவில் இந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் யுத்ததிற்கு முன்னரான காலப்பகுதியில் முந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டு இங்கிருந்து அக்காலப்பகுதியில் இலங்கை முழுவதும் முந்திரிகை பருப்பு மற்றும் பழங்கள் ஏற்மதிசெய்யப்பட்ட காலம் இருந்ததாக வாகரை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாகரை பகுதியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பினைக் கொண்ட நீண்ட பகுதியாகும். மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.வாகரை பிரதேசமானது தொடர்ச்சியாக வறுமையின் பிடியைக்கொண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றது.

ஆனால் வாகரை பிரதேசமான அனைத்து வளங்களைக்கொண்ட அழகிய பகுதியாகும்.தொல்லியல் ரீதியாகவும் நீண்ட வரலாற்றுப்பின்னணியைக்கொண்ட பகுதியாகவும் இது காணப்படுகின்றது. 20க்கும் மேற்பட்ட அழகிய தீவுகளையும் கொண்ட மிகவும் அழகிய,வளங்களைக்கொண்ட பகுதியாக வாகரை பகுதி காணப்படுகின்றபோதிலும் அப்பகுதியானது ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவே தொடர்ச்சியாக இருந்துவருகின்றது.

சுமார் 21ஆயிர் குடும்பங்கள் வாழும் வாகரைப்பகுதியில் நீர்வளம்,நிலவளம்,கடல் வளம் என பல்வேறு வளங்கள் நிறைந்த பகுதியாக காணப்படும் நிலையில் இன்னும் அங்கு வறுமை நிலைமையே மேலோங்கிக்காணப்படுகின்றது.

இதன்காரணமாக யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள மக்களின் வறுமையினை காட்டி பெருமளவான காணிகள் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும் வேறு இனங்களைச்சேர்ந்தவர்களுக்கும் முதலீடுகள் என்ற போர்ரவையில் வழங்கப்பட்டபோதிலும் இதுவரையில் அங்கு எந்த முதலீடுகளும் முன்னெடுக்காத நிலையில் தாம்பெற்றுக்கொண்ட காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் அவர்கள் இருந்தபோது வாகரை பகுதியில் பெருமளவான காணிகள் பறிபோகும் நிலைமை காணப்பட்டது. குறிப்பாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை கட்டுவதற்காக சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகள் அன்றைய காலத்திருந்து முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு அதற்கான அனுமதியை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு அன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. எனினும் மட்டக்களப்புக்கு பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டால் அதில் மட்டக்களப்பில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் பயனடைவார்கள் ஏன் ஐயா தடுக்கின்றீர்கள் என்று அன்று அந்த கூட்டத்தில் கேள்வியெழுப்பிய பிள்ளையானே 2020இல் பின்னர் அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்துவருவதை காணமுடிகின்றது. இன்று இளைஞர்  யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு,தொழில் முயற்சி என்ற அடிப்படையில் பெருமளவான காணிகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வாகரையில் உள்ள வளங்களை முறையாக அரசாங்கமே பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அங்கிருந்து உலகம் எங்கும் ஏற்றுமதியை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.அல்லது எமது புலம்பெயர் மக்கள் முதலீடுகளைச்செய்வதன் மூலம் அப்பகுதியில் உள்ள வளங்கள் முறையாக பயன்படுத்தப்படுமானால் வாகரை பிரதேசம் வளம் கொளிக்கும் பகுதியாக மாறும்.

இதேபோன்று அண்மையில் வாகனேரி பகுதியில் சுமார் 340 ஏக்கர் வயல்காணிகளை பொறுப்பெடுத்து அவற்றில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்காக நிறுவனம் ஒன்றுக்கு அனுமதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்ட நிலையில் அதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததன் காரணமாக அந்த திட்டம் வாகரை பிரதேசத்திற்கு மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று வாகரை பிரதேசத்தில் இல்மனைட் அகளும் செயற்பாட்டிற்கு எதிராக பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராடிவந்த நிலையில் அவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தென்னிலங்கை நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களிருந்தாலும் போராட்டத்திற்கான காரணங்கள் என்பது உண்மையானதாகவே நோக்கவேண்டியுள்ளது.

தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வாகரை பகுதியில் பாரியளவிலான காணி தொடர்பான விடயங்களை கையாளும் நிலைமையை முன்னெடுக்கும் நிலைமை காணப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது சுமத்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் மேலெழும் நிலைமையினை பார்க்கமுடியும்.

எவ்வாறாயினும் வாகரை பிரதேசத்தின் வளங்கள் என்பது முறையான திட்டமிடல்கள் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் மூலம் உருவாக்கப்படவேண்டும்.பல வளங்கள் நிறைந்துகாணப்படும் வாகரை பிரதேசம் முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டு காணிகள் பறிபோகாதவாறு இயற்கை சமநிலைக்கு பாதிப்புகள் ஏற்பாடாhதவாறான தொழில்வாய்ப்புகளையும் வருமானத்தையும் ஏற்படுத்தக்கூடிய தொழில்துறைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும்.

அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் புலம்பயெர் உறவுகள் இங்குள்ள தேசியம்சார்ந்தவர்களை கொண்டு மேற்கொண்டு எமது வளங்கள் பறிபோவதை தடுக்கமுன்வரவேண்டும்.பறிபோனதன் பின்னர் காணி பறிபோகின்றது,சிங்களவன் அபகரிக்கின்றான் என்று கூப்பாடு போடுவதில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.