பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

328 Views

பேரறிவாளனுக்கு பிணை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் விடுப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டும் வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோல் விடுப்பில் உள்ளார்.

இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார்.

இந்த விசாரணையின் போது, 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சர்வதேச பின்னணி குறித்த பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply