இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் தொர்பில் கரிசனை கொள்ளப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, கடந்த மத்திய குழு கூட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அத்தினத்தில் மாநாட்டை நடத்த முடியத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மாநாடு தாமதமடைவதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு, மாநாட்டுக்கான புதிய திகதி முன்மொழியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைவிடவும் வட்டாரக்கிளைகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ரீதியாக அவற்றின் அடைவு மட்டங்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக மத்திய குழுவின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபையின் அனுமதிக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.