மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளிய மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டம்

மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை (30) ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி அதுவும் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியில் வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் அபிவிருத்தி குழு கூட்டத்தை நடாத்தியதை காணக் கூடியதாக இருந்தது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சோலார் பேனல்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சனை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சனைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும் , பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமலிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பல அடக்கு முறைகளுக்கு மத்தியில் நடாத்தப்படும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் ஊடாக அபிவிருத்தி குழு தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து எதனை சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது?

மக்கள் விரோத செயற்பாடுகள், முறையற்ற காணி அனுமதிப்பத்திரம் வழங்கல், விவசாய காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது, பண்ணையாளர்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை, சிங்கள மயமாக்களுக்கு துணை போவது, ஆற்று மணல் வியாபாரத்தை ஊக்கிவிப்பது என மாவட்ட மக்களின் நலன்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதிலும், அவ்வாறான முடிவுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாமல் மூடி மறைத்து நடைமுறைப் படுத்துவதற்காக அபிவிருத்தி குழு தலைவரின் தன்னிச்சையான அதிகாரப் போக்கின் ஊடாக நடாத்தப்படுவதே இது போன்ற அபிவிருத்தி குழு கூட்டங்களின் செயற்பாடாக உள்ளது.

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல் வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன் படுத்த படுகின்றது என்பதே உண்மை.