சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிதான் இலங்கை அரசியலில் இன்று பேசு பொருள். இதன் மூலமாக இலங்கை பாதுகாக்கப்படுமா இல்லையா என்பதைவிட, இதன்மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருக்கின்றாரா இல்லையா என்பதுதான் பிரதான கட்சி ரீதியாக விவாதத்துக்குரிய விடயமாகியிருக்கின்றது.
சா்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கிடைக்கும் என்ற தகவல் உத்தியோக பூர்வமாக செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட உடனடியாக இலங்கையின் பல பகுதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரத்தை காணமுடிந்தது. சில இடங் களில் பட்டாசு கொழுத்தி இதனைக் கொண் டாடினாா்கள். பாற்சோறு கொடுத்தார்கள்.
கடன் கிடைத்திருப்பதற்காக பட்டாசு கொழுத்திக் கொண்டாடிய ஒரே நாடு இலங் கையாக மட்டும்தான் இருக்க முடியும். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. இலங்கைக்கு கடன் கிடைத்திருப்பதை தனிப்பட்ட முறையில் ரணிலுக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியாகக் காட்டிக்கொள்வதுதான் இதன் நோக்கம். அதற் கான அரசியல் தேவை ஒன்று “அவா்களுக்கு” இருந்துள்ளது.
சா்வதேச நாணய நிதியத்துடனான உடன் படிக்கையில் நிறைய மா்மங்களும், இரகசி யங்களும் இருப்பது போல எதிா்க்கட்சிகள் பரப்புரை செய்துவந்த நிலையில், அந்த உடன்படிக்கையின் விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை முழுமையாக வெளிப்படுத்தினாா். அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவந்த எதிரணியினருக்கு இது பலத்த அடியாக விழுந்திருக்கின்றது.
இந்த உடன்படிக்கை தொடா்பாக முன்னரே தமக்கு தெரிவிக்கப்பட்டிருந்தால், இதனை மேலும் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஆலோ சனைகளை தம்மால் வழங்கியிருக்க முடியும் என்ற கருத்தை எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா். ஆக, ஐ.எம்.எப். உடன்படிக்கையை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலையை எதிா்க்கட்சிகளுக்கு ரணில் ஏற்படுத்திவிட்டாா் என்றே தெரிகின்றது.
அதேவேளையில், ரணிலைப் பொறுத் தவரையில் இது தனக்கு கிடைத்த ஒரு தனிப்பட்ட வெற்றியாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருந்துள்ளது. அண்மைக்காலத் தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களை எதிா்க்கட்சிகள் தீவிரப்ப டுத்தியிருந்தன. ராஜபக்சக்களுக்கு எதிராக முன் னெடுத்த போராட்டங்களின் தொடா்ச்சியாக இதனை முன்னெடுக்கின்ற போதிலும், அப்போதிருந்த மக்கள் அலையை இவா்களால் இப்போது உருவாக்க முடியவில்லை. அதற் குரிய காரணங்களை எதிரணியினா் புரிந்து கொண்டிருந்தாலும்கூட, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதுதான் “எதிா்க் கட்சிகளின் பணி” என்ற வகையில் அவற்றை அவா்கள் முன் னெடுக்கின்றாா்கள்.
அதிகரித்த வரி விதிப்பு, விலைவாசி உயா்வு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை, பயங் கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது என்பன வற்றை பிரதானமாக முன்னிறுத்தியே இப் போது ரணிலுக்கு எதிராக போராட்டங்கள் முன் னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் என்பனதான் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் நிற் கின்றன.
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஏதோவொரு வகையில் அடிப்படையாக இருப்பது பொருளாதார நெருக்கடிதான். இப்போது, ஐ.எம்.எப். வழங்கியிருக்கும் கடன்களின் மூலமாக இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முடிவைக் கொண்டுவந்துவிடப்போகின்றோம் என்பதைத் தான் ரணில் சொல்லியிருக்கின்றாா்.
இந்தக் கடன் உதவி ரணிலைப் பலப்படுத்தியிருக்கின்றது. தமது போராட்டங்களை நியாயப்படுத்த எதிரணியினா் முன்வைத்த காரணங்களைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இதனை ஒரு அரசியல் வெற்றியாக அல்லது சாதனையாகக் காட்டிக்கொள்ள ரணில் தரப்பி னா் முற்படுகின்றாா்கள். அதன் மூலம், ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவது பட்டாசு கொழுத் தியவா்களின் நோக்கமாக இருந்தது.
கடந்த வருடம் காணப்பட்ட நிலை யுடன் ஒப்பிடும் போது மக்கள் அன்றாடம் முகங்கொடுத்த பல நெருக்கடிகளுக்குத் தீா்வு காணப்பட்டிருக்கின்றது. இது நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்பது வேறு விடயம். ஆனால் நெருக்கடி குறைந்து, வரிசைகளில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்திருக்கின்றது. டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கின்றது. இதனால் இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் குறைவடைவதற்கு வாய்ப்புள்ளது. தங்க நகைகளின் விலையிலும் சடுதியான வீழ்ச்சியைக் காணமுடிகின்றது. அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் கூட குறைந்திருக்கின்றது.
இவை அனைத்தும், இன்றைய நெருக் கடியை எதிா்கொள்வதற்கு ரணிலினால் மட்டும்தான் முடியும் என்ற உணா்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றது. அந்த உணா் வுக்கு மேலும் வலுச்சோ்ப்பதாகவே இந்த பட்டாசு கொழுத்தப்பட்டதும், பாற்சோறு பொங்கப் பட்டமையும் அமைந்திருந்தது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள் கைகள் காரணமாக இருந்துள்ளன. இருந்த போதிலும் போருக்குப் பின்னா் தொடா்ச்சியாக பதவியிலிருந்த ராஜபக்ஷக்களின் காலத்தில் காணப்பட்ட ஊழல், மோசடிகளும் இதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடி திடீரென இவ்வாறு ஒரு தீவிரமான நிலையை எட்டுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்களின் முன்னெடுத் தவை உடனடிக்காரணமாக அமைந்தது.
இப்போது ஐ.எம்.எப். இடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி மறுசீரமைக்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கும் வேறு உடனடியான பொருளாதாரத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த நிதி கிடைத்திருப்பதன் மூலமாக, “வங்குரோந்து நிலையிலுள்ள நாடு” என்ற நிலையிலிருந்து இலங்கை மீண்டு விட்டது என ஜனாதிபதி ரணில் உற்சாகமாகச் சொல்லியிருக்கின்றாா். தன்மீதான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது நாடாளு மன்றத்தில் புதன்கிழமை இவா் நிகழ்த்திய உரை யின் நோக்கமாக இருக்கலாம்.
ஐ.எம்.எப். உதவியைப் பெற்றுக் கொண்டதன் மூலம், உள்ளுராட்சித் தோ்தல் உடன டியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோஷத்தை பலீனப்படுத்துவது ரணிலின் நோக்கமாக இருந்துள்ளது. உள்ளுராட்சித் தோ்தலைவிடவும், பொருளாதார மீட்சிதான் முக்கியம் என்பதுதான் ரணில் சொல்ல முற்பட்டிருக்கும் செய்தி.
அதேவேளையில், இதனை தன்னுடைய சாத னையாகக் காட்டிக்கொள்வதன் மூலம் இவ்வருட இறுதியில் திடீா் பொதுத் தோ்தல் ஒன்றுக்குச் செல்வதும் ரணிலின் மூலோபாயமாக இருக்கலாம்.
ஐ.எம்.எப். நிதி கிடைத்திருப்பதால் தற்போது நாடு எதிா்கொண்டிருக்கும் பெரும் பாலான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீா்வைக்கண்டுவிட முடியுமா என்ற கேள்வி இருந்தாலும், பொதுமக்கள் மீதான அழுத் தங்களைப் பெருமளவுக்கு குறைக்க முடியும். இது எதிா்க்கட்சிகளின் பிரசாரத்தை பலவீனப்படுத்திவிடும் என்பது ரணிலின் கணிப்பு. ஐ.எம்.எப். விவகாரத்தைப் பொறுத்தவரையில் எதிா்க்கட்சிகள் தடுமாறுவதைக் காணமுடிகின்றது. அதற்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுக்கும் போது மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என்பது அவா்களுக்குத் தெரிகின்றது. அதேவேளையில், அதற்கான மாற்று வழியையும் அவா்களால் முன்வைக்க முடியவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு:
- ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.
- ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும்.
- அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு.
- 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.
- 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12 வீதம் முதல் 18 வீதமாக குறைத்தல்.
- 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.
- அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.
- மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
- வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
நாணய நிதியத்தின் நிதி உதவி இலங்கையை மேலும் கடன் பொறியில் வீழ்த்துமா அல்லது அதிலிருந்து மீட்குடா என்பது எமது தலைவர்களின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. கடந்த காலங் களைப் போல ஊழல்களும் மோசடிகளும், வீண்விரயங்களும் நிறைந்ததாகததான் இந்த அரசாங்கமும் செயற்படும் என்றால், மீண்டும் படுகுழியில் வீழ்சதிலிருந்து யாராலும் இலங் கையை மீட்கமுடியாது என்பதே ஒண்மையாகும்.