புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டும்!

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, புலம்பெயர் தேசத்தில் உள்ள தடைசெய்யப்பட்ட சில தமிழ் மக்கள் மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக இந்திய அரசும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் போராட்டம் உச்சகட்டம் அடைந்ததன் வெளிப்பாடாக வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கான மாகாண சபை ஆட்சி முறை வந்தது.

இந்த மாகாண சபை ஆட்சி முறை வருவதற்காக தமிழ் மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்த் தியாகம், சொத்துகள் உட்பட பலதரப்பட்ட தியாகங்களை செய்துள்ளனர்.

இந்த மாகாண சபை ஆட்சிமுறை 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டது.

அதில் முதலாவது அம்சமாக ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அந்த பொது மன்னிப்பு ஒட்டுமொத்தமாக இயக்கங்களில் இருந்த அனைவருக்கும் இருந்த போதும் தற்போது கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் மக்கள், சில தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக இலங்கைக்கு வரவேண்டிய கனிசமான பொருளாதாரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தடைபட்டுக் கொண்டிருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசும் இந்திய அரசும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்க முடியாது.

இந்த ஓப்பந்தம் காலாவதியாகவில்லை. ஆகவே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.