குடும்பத்தினருடன் அகதிகள் மீண்டும் இணைவதற்கு வழியை ஏற்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய அரசு 

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து நிரந்தர விசா பெற்ற அகதிகள் தங்கள் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது. 

இதன் மூலம்  பல ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தினரை பிரிந்திருந்த அகதிகள் குடும்பத்தினருடன் இணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், இந்த மாற்றம் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள அகதிகளுக்கு பொருந்தாது.

முன்னதாக கடந்த தாராளவாத தேசிய கூட்டணி அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கை படி, படகு வழியாக அவுஸ்திரேலியாவை அடைந்த அகதிகளின் குடும்ப மறுஇணைவு விசா விண்ணப்பங்களுக்கு “மிகக் குறைந்த முன்னுரிமை”யே வழங்கப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாட்டினையே தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் நீக்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசின் தற்போதைய முடிவின் வாயிலாக ஆயிரக்கணக்கான அகதிகள் பலன் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈரானைச் சேர்ந்த அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு இது வழியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

குடும்ப மறு இணைவு விசாவின் மீது படகு வழியாக வந்த அகதிகளுக்கு வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு, படகு வழியாக அவுஸ்திரேலிய வர எண்ணுபவர்களை தடுக்க உதவியது என முந்தைய தாராளவாத அரசாங்கம் கூறி வந்தது.

கடந்த மே 2022ல் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி, படகு வருகைகள் தொடர்பான பரந்தபட்ட கொள்கை எதுவும் மாறவில்லை, வலுவான எல்லைக் கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என உறுதியாக கூறி வருகிறது.

“தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத அரசின் நிர்வாக சிக்கலுக்கு மனிதாபிமான வழியில் இந்த அரசாங்கம் தீர்வு கண்டு வருகிறது,” என கொள்கை மாற்றம் தொடர்பாக வெளியாகியுள்ள அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.