22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் போது மீண்டும் திரும்பும் என தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.