இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது பாரதமே தவிர தமிழ் தலைவர்களோ, புலிகளோ அல்ல ” விக்கினேஸ்வரன்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்தி

தமிழர்களின் பிரதிநிதிகளோ அல்லது புலிகளின் தலைவர்களோ இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இந்தியாவே தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எனவே, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளதென வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட எம். பி யுமான சி . வி . விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற, சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில்இந்தியப்பிரதமர்நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்புவதற்கு 7 தமிழ்க் கட்சிகளும் தீர்மானித்ததாக அவர் விபரித்திருக்கிறார்.

ஏழு தமிழ் கட்சிகளின் கடிதம் ஸ்ரீ மோடிக்கு அனுப்பப்பட்டதற்கும் உத்தேச புதிய அரசியலமைப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதாவென அவரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்திருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது.

அநேகமாக ஆம். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக புதிய அரசியலமைப்பில் பயனுள்ள மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1972 மற்றும் 1978 இன்இரண்டு முன்னைய அரசியலமைப்புகள் மீதான விவாதத்தை தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது. வடக்கு ,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பைபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலிருந்து தடுக்கக் கூடியதாக எதுவும் சாத்தியமற்றதாகவிருந்தது.

இம்முறையும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் அவர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை கொண்டுவரும்.

1978 ஒற்றையாட்சிஅரசியலமைப்பு இன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் ஒரேயொரு வலுக் குறைந்த நன்மை பதின்மூன்றாவது திருத்தமாகும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், அதனை அமுல்படுத்தும் போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நாடளாவிய ரீதியில் மாகாணசபை முறைமையை பிரயோகிப்பதை தேர்ந்தெடுத்தார் இப்போதுஅவர்கள் மாகாண சபைகளை வெள்ளை யானை என்று குறிப்பிடுகிறார்கள். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவ்வாறு இருக்ககூடும்.

ஆனால் இலங்கை பூராகவும் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பார்வையில் அவர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாகாணசபை மட்டுமே உறுதியான சட்டரீதியான நிறுவனமாக உள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் பார்வையில் மாகாணசபைமுறைமை எடுத்துவிட்டால் இந்த நாட்டில் நாம் மற்றொரு சிறுபான்மை இனமாக மாறிவிடுவோம். உண்மையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஏழு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினர் இரண்டு மாகாணங்களிலுமுள்ள பெரும்பான்மையினரை முழு தீவு முழுவதும் சிறுபான்மையினராக மாற்ற முடிந்தது.

தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்,

ஒரு பழமையான மொழியைப் பேசுகிறார்கள், தீர்க்கமான தாயகங்களைக் கொண்டுள்ளனர், பெரும்பான்மையான சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றுகிறார்கள். சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்காமல், ஒற்றையாட்சிஅரசியலமைப்பிலிருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கினால், எங்களுடையது என்று அழைக்கக்கூடிய எந்த வொரு உறுதியான சட்டரீதியான நிறுவனமும் இல்லாமல் நாங்கள்நிராதரவாகிவிடுவோம் .நாங்கள் அறிமுகப்படுத்த முயற்சித்திருந்த பிரயோசனமான பொருளாதாரத்திட்டங்களை அரசாங்கம் அதனது தரப்பில் தடுத்து ஊறுவிளைவித்தபோதும் வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வடக்கில் மாசுபடுத்தும் திட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கு விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகளை என்னால் தடுக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில் மாகாணசபை வலுக் குறைந்ததாகவும் வினைத்திறனற்றதாகவும் இருந்த போதிலும், ஏனைய இடங்களில் பெரும்பான்மை சிங்களம் பேசும் இடங்கள் என்பதற்கு மாறாக தமிழ் பேசுபவர்கள் என்ற சட்டரீதியான அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மக்களுக்கு இப்போதும் வழங்குகின்றது. மாகாணசபையை அகற்றினால் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களை இலகுவில் சிறுபான்மையினராக முழு நாட்டிலும் கட்டுப்படுத்த முடியும். ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீடானது புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளை கைவிடுவதை கற்பனைசெய்து பார்க்கக்கூடியதொரு முன்னோடியாக இருக்கின்றது

மாகாண சபை முறைமையை நீக்குவதை புதிய அரசியலமைப்பு வரைவின் உள்ளடக்கம் கொண்டிருக்கின்றது என்று சிங்கள பத்திரிகையில் வெளிவந்திருந்ததை அமைச்சர்கள் இப்போது மறுத்து வருகின்ற போதிலும், நாங்கள் ஸ்ரீ மோடிக்கு எமது கடிதத்தை அனுப்பிய போது இதனை முன்னரேயே எதிர்வுகூறியிருந்தோம் . புதிய அரசியலமைப்பின் முழு நோக்கமும் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கி, இலங்கை விவகாரங்களில் இந்தியா குரல் கொடுப்பதைத் தடுப்பதாகும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்தியா இலங்கைக்கு உதவவில்லை என்றால், கொழும்பில் அரசுக்கு பாதகமான எதுவும் நடந்திருக்கும். அந்த நேரத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை (இப்போது சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போல). இந்தியா தனது பங்கிற்கு தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழர்களின் பிரதிநிதிகளோ அல்லது புலிகளின் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரியமை , அது தமிழர்களாகிய எமக்கு போதுமான அதிகாரங்களை வழங்கியதற்காக அல்ல, மாறாக அது அகற்றப்பட்டால் நாம் முற்றிலும் சக்தியற்றவர்களாகிவிடுவோம் என்பதற்காகவே . வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாக இடம்பெறும் எந்தவொரு விடயத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய பூர்வாங்க கலந்துரையாடல்களில்பங்கேற்றவராக இப்போதுஇந்தியாவை நாம் கொண்டிருக்கிறோம். வடக்கு , கிழக்கைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மாகாண சபைகளை நீக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருவதன் மூலம் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நாங்கள் தேடவில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மாகாண சபைகளை வைத்திருக்க முயல்கிறோம். நாங்கள் கருதும் நிரந்தரத் தீர்வு கூட்டு சம்மேளனமேதவிர , குறைவானத்து அல்ல.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கும் தார்மீகக் கடமை உள்ளது. இலங்கையின் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்குட்படுத்தப் படுத்தப்படும்போதும்,பாரபட்சம் காட்டப்படும்போதும் அலட்சியமாக இருக்க முடியாது.பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்திருப்பது அரசாங்கத்தின் திட்டங்களை குறிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்றதான சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் ஸ்ரீ மோடிக்கு கடிதம் அனுப்பத் தீர்மானித்தோம்” என்று கூறியுள்ளார்.

Tamil News