தையிட்டி விகாரை விவகாரம்: சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார்.

இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம்.

அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம்.

அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிஸார்  பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும்  இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம்.

இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம்.

அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிஸாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.