சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை களமிறங்கி உள்ளது. அந்தக் கட்சியின் தேர்தல் பிரவேசம் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இடம் பெற்றது. இரண்டாவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அது மிகுந்த நம்பிக்கையோடு குதித்திருந்தது.

உள்ளுராட்சித் தேர்தலில் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் வேட்பாளர்களை அது மண் கௌவச் செய்திருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இதனால் படுதோல்வி ஏற்பட்டது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆட்சியில் உள்ள அரச கட்சிகளே வெற்றி பெறுவது வழமை. அந்த வழமைக்கு மாறாக பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் 40 வீத வாக்குகளை சுவீகரித்து அமோகமாக வெற்றி பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி 29 வீத வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 12 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றிருந்தன. தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கியிருந்த கோத்தாபாய ராஜபக்ஷ 69 லட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் 51 வீதமான வாக்குகளைப் பெறுபவரே வெற்றியாளராவார். ஆனால் பொதுஜன பெரமுன முதற் தடவையாகப் போட்டியிட்ட இந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 69 லட்ச வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் பொதுஜன பெரமுன தனது மூன்றாவது தேர்தலாக ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்று அரசியல் ஆய்வளார்களும் நோக்கர்களும் ஆருடம் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் பொதுஜன பெரமுனவின் தலைவராகிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகோதரராகிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும் இந்தத் தேர்தலில் தமது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வெற்றி இலக்கை அடைவதற்கான தேர்தல் முயற்சிகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியையும் குறிப்பாக சிங்கள பௌத்த மக்களின் திரட்சியான வாக்கு பலத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திவிட வேண்டும். அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும் என்றதோர் அரசியல் இலக்கை அடைவதற்காகவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.

ஐக்கியம் குலைந்த ஐக்கிய தேசிய கட்சி

நல்லாட்சி அரசாங்கம் என்ற மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 6 மாதங்கள் இருந்த நிலையிலேயே ஜனாதிபதிக்கு உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்தார். மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றி அரசாங்கத்தை முழுiயாக பொதுஜன பெரமுனவின் வசமாக்கிவிட வேண்டும் என்ற அவருடைய அரசியல் நோக்கம் வெளிப்படையாகி இருந்தது.

இதனால்தான் இந்தத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது என்று கணிக்க வேண்டியதாயிற்று. பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் காட்டில் நல்ல மழை பொழிகின்றது என்றே கூற வேண்டும். எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி அதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. வலிந்து ஏற்படுத்தி உள்ளது என்றுகூடக் கூறலாம்.

ஒரு தீர்க்கமான வெற்றி இலக்கை நோக்கி பொதுஜன பெரமுன இந்தத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்ற தருணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கியமாகவும் உறுதியாகவும் தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.cartoonwasanath சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்தலைமைப் பதவிக்கான அதிகாரப் போட்டியில் அந்தக் கட்சி சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசாவும் இந்தப் போட்டியில் விடாக்கண்டன் கொடாக்கண்டனாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.. இதனால் அந்தக் கட்சிக்குள் ஐக்கியம் குலைந்து போயுள்ளது. யாருடைய தலைமையை ஏற்றுச் செயற்படுவது என்பது தெரியாமல் கட்சியின் முக்கியஸ்தர்களும் முக்கிய உறுப்பினர்களும் குழும்பியுள்ளார்கள்.

அதேவேளை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷுக்குப் பதிலாக வேறு ஒருவரை ரணில் விக்கிரமசிங்க நியமனம் செய்ததையடுத்து, மலையகத் தொழிற்சங்க வட்டாரங்களிலும், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டாக இணைந்திருந்த மலையகம் மற்றும் தமிழ்க்கட்சிகள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலைமை உருவாகியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயும் குழப்ப நிலைமை. பங்காளிக் கட்சிகளுடனான உறவிலும் ஒரு குழப்ப நிலைமை. இந்த அகப்புற குழப்ப நிலைமைகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி தனது பாரம்பரிய அரசியல் செல்வாக்கை இழந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று உருக்குலைந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

பொதுஜன பெரமுன கட்சி தலையெடுத்ததையடுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி உருக்குலைந்து போயுள்ளது. அதேபோன்ற நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஆளாகியிருப்பதனால் இந்தத் தேர்தலில் ஏறுமுக நிலையில் உள்ள பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக ஆளுமையுள்ளதோர் அரசியல் சக்திக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆளும் கட்சிக்கு எதிரான வல்லமையுள்ளதோர் எதிர்க்கட்சிக்கான வெற்றிடமாகக் கூட கருத முடியும்.

வளர்முக போக்கில் பிரகாசமா…?

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட தலைமப்பதவிக்கான போட்டியின் விளைவாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாசாவுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் காண்பபடுவதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் இந்தத் தேரதலில் அவருடைய தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி ஆளும் கட்சியகிய அதிகார பலத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் அரசியல் செல்வாக்கு அலையில் எந்த அளவுக்கு ஈடுகொடுப்பார், எந்த அளவுக்கு ஈடு கொடுக்க முடியும் என்பது தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த சஜித் பிரேமதாசாவின் தந்தை பிரேமதாசா ஐக்கிய தேசிய கட்சியின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார். ஒரு மேதின நாளில் ஆமர் வீதி பொலிஸ் நிலையச் சந்தியில் இடம்பெற்ற தற்கொடை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவருடைய மரணம்கூட சிங்கள மக்கள் மத்தியில் அவர் மீதான அனுதாப அலையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் அவருடைய புதல்வராகிய சஜித் பிரேமதாசா சிங்கள மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒருவராகத் திகழ்கின்றார்.

எனினும் அவர் தன்னுடைய அரசியல் செயற்பாடுகளின் மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கின்றாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து அவருக்கு வாக்களித்திருந்த போதிலும், அந்த மக்களின் மனங்களில் நம்பிக்கைக்குரிய ஓர் அரசியல் தலைவராக இடம்பிடிக்க அவர் தவறிவிட்டார். சிங்கள பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தி மத ரீதியாகவும் இன ரீதியாகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துச் செயற்படுகின்ற ராஜபக்ஷக்களின் முன்னால் அவர் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கூறுவதற்கில்லை.sajith premadasa e1581381441757 சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்
அதேவேளை, நாட்டின் மூன்றாவது அரசியல் சகிதியாகத் திகழ்கின்ற ஜேவிபியின் வாக்குவங்கியையும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தேர்தலில் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது.

மறுபுறத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பலமிழந்திருக்கின்றது. தலைமைத்துவப் போட்டி காரணமாக ஐக்கிய தேசிய கட்சியும் வலுவிழந்து போயிருக்கின்றது. பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற ஒரு தருணத்தில் நாட்டின் பாரம்பரிய வரலாற்று பெருமையைக் கொண்டிருந்த இரண்டு பெரும் தேசிய கட்சிகளும் இவ்வாறு செயல் வல்லமை இழந்திருப்பது பொதுஜன பெரமுன என்ற வளர்முக போக்கில் திகழ்கின்ற பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்.

ஒரு பொதுநிலை நோக்கில் பொதுஜன பெரமுன தேர்தல்களை வெற்றிகரமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் எதிர்கட்சிகளும் பெரிய சவாலாகக் காணப்படவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்குகின்ற தருணத்தில் அரசாங்கத்தினதும், அரச தரப்பினரதும் சில நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் ஒரு சுமுகமான தேர்தல் வெற்றிக்கு இடையூறு விளைவிக்கக் கூடியவையாகவே தென்படுகின்றன.

பிடிவாதமும் விளைவும்

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்கி ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு நாடளாவிய ரீதியில் இயல்பு வாழ்க்கையை முடக்கிய நிலைமையை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ ஓர் அவசர நிலைமையாகக்  கருதுவதற்கு மறுத்துவிட்டார்.

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திகதி குறிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடத்த முடியாதவாறு கொரோனா நோயிடர் தடையேற்படுத்திவிட்டது. இந்த வைரஸ் நோய்த் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக முழு நாட்டையும் முடக்கியதனால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையும், தவிர்க்க முடியாத அவசியமும் ஏற்பட்டிருந்தன. ஆனால் நாடாளுமன்றத்தைத் திரும்பவும் கூட்ட முடியாது என்று திட்டவட்டமாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அதில் பிடிவாதமாகவும் இருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பது சட்ட ரீதியான தேர்தல் கால நிபந்தனை. ஆனால் கொரோனா நோயிடர் காரணமாக இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. இந்த நிலைமை அரசியலமைப்புச் சட்ட ரீதியான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டது.estate7 சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்ஆனாலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நிலைமைகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை. அவருடைய பிடிவாதம் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்த நிலையில் அடிப்படை உரிமை மீறல்களாகச் சுட்டிக்காட்டி இந்த நிலைமைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சிகளும் ஜனநாயகவாதிகளும் உச்ச நீதிமன்றத்தை நாடிய போதிலும், அவர்கள் எதிர்பார்த்தவாறு நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமையவில்லை. நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதியின் கையை ஓங்கச் செய்வதற்கே வழிவகுத்துவிட்டது.

ஆனாலும் நாட்டின் அதி உச்ச சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியான செயல் ஒழுங்கில் ஓர் இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்பதை நாட்டு மக்கள் ஓரளவுக்காவது உணர்ந்து கொண்டார்கள். அறிந்து கொண்டார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒழுக வேண்டிய கடப்பாடு அத்துடன் முடிந்துவிடவில்லை. அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜுன் 2 ஆம் திகதி தான் உருவாக்கியிருந்த இரண்டு ஜனாதிபதி செயலணிகளைப் பற்றிய அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிட்டிருந்தார்.

கோரிக்கைகள்

இவற்றில் கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து அவற்றைப் பராமரிப்பதற்கான செயலணி ஒன்று. பௌத்த பிக்குகளையும், முக்கிய திணைக்களங்களின் சிங்கள பௌத்த போக்கைக் கொண்ட சிங்கள அதிகாரிகளையும் இந்த செயலணி உறுப்பினர்களாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் இது செயற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான விசேட செயலணி என்பது மற்றொன்று. இந்த செயலணியில் முப்படைத் தளபதிகள், புலனாய்வு நிறுவனங்களின் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, இந்தச் செயலணியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குவதற்காக நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய வகையிலேயே இந்த இரண்டு செயலணிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த செயலணிகளை உருவாக்கியதன் மூலம் அரசு அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டிருக்கின்றது என சட்டத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த செயலணிகளை உருவாக்கி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகிய சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை நிறைவேற்றதிகாரம் தன் கையில் எடுத்துக் கொண்ட அத்துமீறிய செயற்பாடாகும் என்று அந்த நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

அதேவேளை, தனிமனித நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த செயலணிகளை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார் என்றும், அது ஜனநாயக நடைமுறைகளையும் செயல் ஒழுங்கையும் மீறிய செயற்பாடு என்று ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகிய சஜித் பிரேமதாசா, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கத்தைக் கண்டித்திருக்கின்றார்கள். அந்தச் செயற்பாடு ஜனநாயக வழிமுறைகளை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி கண்டித்திருக்கின்றார்கள்.

நாட்டின் புத்திஜீவிகளும் இந்த செயலணிகளின் உருவாக்கத்தைக் கண்டித்துள்ளதுடன், அதற்கான உத்தரவை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சோதனைக்களமா…..?

தேர்தல் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோன்று தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கென்றே ஒரு விசேட செயலணியை உருவாக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தேவையும் ஏற்படவில்லை என்று துறைசார்ந்த பலரும் பல்வேறு அமைப்புக்களின் ஊடாக வலியுறுத்தி உள்ளார்கள்.

வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் தென்பகுதி என்ற பிரதேச ரீதியாக அல்லாமல் நாடெங்கிலும் உள்ளவர்களினால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முறையற்றதாகவும் காலத்திற்கு அவசியமில்லாததாகவும் நோக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் மிகவும் முக்கிய விடயங்களாக தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளினாலும், அவற்றின் வேட்பாளர்களினாலும் கையாளப்படும். பிரசாரம் செய்யப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

சிங்கள மக்களையும் பௌத்தத்தையும் முதன்மைப்படுத்தி இனவாத, மதவாத ரீதியான பிரசாரத்தில் சிங்கள மக்களைத் தம் வசப்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு ஜனநாயக விரோத நடவடிக்கை என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேர்தல் அவதானிகள் கருதுகின்றனர்.ww சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய ராஜபக்ஷக்களின் அரசியல் வியூகம் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத வகையில் அவர்கள் அப்போது வீழ்ச்சியுற்றார்கள். அந்த வீழ்ச்சியில் இருந்து மீள் எழுந்துள்ள அவர்கள் இப்போது சிங்கள பௌத்தத்தையும், பௌத்த தேசியத்தையும் முதன்மைப்படுத்தி உள்ளனர். சிங்கள பௌத்தத்திற்கே முதலிடம், முன்னுரிமை என்ற கோஷத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த மக்களை மட்டுமே இந்த நாட்டின் அதிகாரபூர்வமான, அதிகாரம் வாய்ந்த குடிமக்கள் என்ற நிலைப்பாட்டை உருவாக்குகின்ற ஓர் அரசியல் மாயையை உருவாக்கி இருக்கின்றார்கள்.

இந்த அரசியல் மாயையில் சிங்கள பௌத்த மக்கள் சிக்கியுள்ள அதேவேளை, ஏனைய மதங்களை, குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் வேறு வேறு பிரிவுகளைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் இந்த பௌத்த மத ரீதியான அரசியல் போக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மத ரீதியான பிளவு சிங்கள மக்களை இருகூராகப் பிரிவடையச் செய்யவும் கூடும். இந்தப் பிரிவு ராஜபக்ஷக்களுக்கு தேர்தல் வெற்றிக்கான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியானாலும், பொதுஜன பெரமுனவை மையமாகக் கொண்டுள்ள இந்தத் தேர்தல் பல தரப்பினருக்கும் பல நிலைமைகளில் ஓர் அரசியல் சோதனைக்களமாகவே அமையும் என்பதை ஊகித்து உணர முடிகின்றது.