அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டம்

ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், நாளை  நாடளாவிய ரீதியில் ஆசியர்கள் அதிபர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

ஊழல் மிகுந்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் வரும் 25ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கமும் அதிபர்கள் கூட்டணியுடனும் இலங்கை ஆலோசகர்கள் சங்கத்துடனும் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

மாணவர்கள் இன்று பல்வேறு கஸ்டங்களுடன் வாழ்கின்றனர்.மின்சார நெருக்கடிக்கு மத்தியிலும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தூர இடங்களுக்கு கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவுகள் மிகவும் பின்தள்ளிய நிலையிலுள்ளது.

இது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியிருந்தோம்.இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு கோரியிருந்தபோதிலும் கல்வி அமைச்சு இதுவரையில் எந்த தீர்வினையும் தரவில்லை.இந்த அரசாங்கம் ஆட்சியைப்பொறுப்பேற்ற காலத்தில் இதுவரையில் மூன்று பேர் கல்வி அமைச்சினை பொறுப்பேற்றுள்ளார்கள்.இதன் காரணமாக கல்விக்கொள்கையினை நடைமுறைப்படுத்தமுடியாத அபாய நிலையினை நோக்கி இன்று நாடுசென்றுகொண்டிருக்கின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஆசிரியாகள், அதிபர்கள், மாணவர்களின் வருகையினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்க்கமான நடவடிககையினை எடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டங்களை நடாத்தவுள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News