தமிழ் இளைஞர்கள் ஒன்றுபட்டு செயற்படாது விட்டால் -கிழக்கில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும்

419 Views

இளைஞர்கள் ஒன்றுபட்டு செயற்படாது விட்டால்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கும் போது அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  மேலும் கருத்து  தெரிவித்து தெரிவிக்கையில்,

‘நாங்கள் இந்த பாராளுமன்ற தேர்தலின்போது எதிர்பார்க்கவில்லை இந்த மொட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20ஆசனங்கள் கிடைக்கும் நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாககூட இருக்கலாம் என்று நம்பிக்கையுடனே நாங்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரச தரப்பிலும் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் உள்ள நிலையில் அதுவே இந்த மாவட்டத்தின் துரதிர்ஸ்டவசமாக மாறியுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபரே முதலாவது அரசியல் கைதியாகவுள்ளார். சிறையில் அரசியல்கைதியைவிடவும் அவர் ஒரு அரசியல் கைதியாகவுள்ளார். நாங்கள் சிலவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவுகளைக்கேட்டால் அது அரசாங்கத்துடன் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரச்சினையாகவுள்ளது. அவ்வாறு வழங்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை நாங்கள் பேசவேண்டும். அரசியல் தீர்வுக்கான ஆதரவினை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். தேசிய ரீதியான பொறிமுறையொன்றை நாங்கள் மாகாணசபை ஊடாக உருவாக்கமுடியும்.இன்று தீர்மானங்கள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எங்களது கைகளில் அதிகாரம் இருக்குமானால் நாங்கள் எதனையும் செய்யமுடியும். இன்று கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் 10இலட்சம் ரூபா நிதிமட்டுமே வழங்கப்படுகின்றது. இதனைவைத்து எதனையும் செய்யமுடியாது.

எனக்கு தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகயிருக்க வேண்டும் என்று ஆசையில்லை. நான் எனது வயதில் பாராளுமன்ற உறுப்பினராகயிருப்பதன் காரணமாக பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன். ஒரு படம் பார்க்க முடியாது, நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முடியாது. அவ்வாறு தெற்கு பக்கம் சென்றால் புகைப்படம் எடுப்பதிலேயே எனது நேரம் செலவாகிறது.

சர்வதேசம் மூலமே எமக்கான தீர்வுக்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முடியும். அதற்கான ஆதரவு தளம் இளைஞர் மத்தியில் இருக்கவேண்டும். தமிழ் இளைஞர்கள் ஒன்றுபட்டு செயற்படாது விட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல் போகும் நிலையே ஏற்படும்.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் 2008 தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையிலிருந்தது தமிழ் முதலமைச்சர்,2012 தொடக்கம் 2017வரையிலிருந்தது முஸ்லிம் முதலமைச்சர்,இன்று அரசாங்கத்தின் திட்டம் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழும் என்ற அடிப்படையில் எந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவில்லையோ அந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டுவருகின்றது’ என்றார்.

Tamil News

Leave a Reply