தமிழ்த்தேசியமும் தடுமாறும் முடிவுகளும் – பா.அரியநேத்திரன்

50 Views

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிய அரசியலில் 2009, மே, 18, க்குப்பின்னர் தமிழத்தேசிய கட்சிகள் பல முளைத்துவிட்டன “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காறன்” எனும் நிலை இப்போது உள்ளது. ஒருவர், இருவர் சேர்ந்தால் தனி தமிழ்த்தேசிய அரசியல்கட்சி உருவாக்கலாம் என்ற நிலைமை தான் இப்போது காணமுடிகிறது. முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்படுவதற்கு முன்னம் இப்படிப் பல கட்சிகள் முளைக்கவில்லை, தமிழத்தேசிய கூட்டமைப்பு மட்டுமே இருந்தது. இதனால் இப்போது தமிழ்த்தேசிய அரசியல் கொள்கைகள் தளம்பல் போக்காக மாறிவிட்டது.

2001, அக்டோபர் 20 ல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது நான்கு கட்சிகளாக ஒன்றிணைந்து 2001, டிசம்பர் 6, இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இயங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2004, ஏப்ரல், 2,ல், பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியைத் தமதாக்கி தனி உரிமை கோரிய ஆனந்தசங்கரி தானும் அந்த கட்சியையும் கொண்(ன்)டு சென்றுவிட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகித்த இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்கள் ஆனந்தசங்கரியாரை “போனால் போகட்டும் போடா” என்ற அவரை விட்டுவிட்டு 2004, பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தலில் களம் இறங்கி, வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து 22  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்.

வடக்கு கிழக்கில் 22, பேர் ஒரே கட்சியில் இருந்து பாராளுமன்றம் சென்றது இதுவே வரலாற்றில் முதல் தடவை. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குகள் அடிப்படையில் நால்வரும், தேசியபட்டியலில் ஒருவருமாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே கட்சியில் இருந்து தெரிவானதும் இதுவே முதல் தடவை. திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இருவரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒருவருமாக கிழக்கு மாகாணத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாணத்தில் இருந்து பதினான்கு பேரும் தெரிவாகினர்.

ஏற்கனவே 2001, டிசம்பர் 6 தேர்தலில் தெரிவான 15, பாராளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் எடுத்தனர். ஆனால் ஆனந்தசங்கரி மட்டும் விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்கமுடியாது எனக்கூறி அந்த தீர்மானத்திற்கு எதிராக ஊடகங்களில் அறிக்கை விட்டு அடம்பிடித்து முரண்பட்டு பாராளுமன்றில் செயல்பட்டார்.

இதனால் தமிழர் விடுதலை கூட்டணி மத்தியகுழு கூட்டத்தில் ஆனந்தசங்கரியாருக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் அதை நிறைவேற்ற முடியாமல் சட்ட ரீதியாக அவர் நீதிமன்றை நாடி வெற்றிபெற்றதனால் ஆனந்தசங்கரி தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் விலகினார்.

இவ்வாறான நிலைமையில் 2004, பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யமுடியாமல் ஆனந்தசங்கரியார் தடைபோட்டார்.  இதனால் அவசரமாக கிளிநொச்சியில் அப்போது கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, (ITAK) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTG) கட்சித் தலைவர்களும் விடுதலைப்புலிகளின் தலைமையும் கூடி ஆராய்ந்தபின்னர் இனி இலங்கை தமிழரசு கட்சியே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக வீட்டுச்சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவின்படியே 2004, பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.

2009, மே, 18, முள்ளிவாய்க்கால் பேரவலம், விடுதலைப்புலிகளின் மௌனம் ஏற்பட்ட பின்னர் 2010  பொதுத்தேர்தலில், கட்சி வேட்பாளர் பங்கீடு தொடர்பான முரண்பாடு ஏற்பட்டபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பிரிந்து சென்றது. அவருடன் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய மூவரும் சேர்ந்து இன்னும் சிலரை இணைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து 2010, பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கு தாயகத்தில் போட்டியிட்டு எந்த ஒரு ஆசனங்களையும் பெறாமல் தோல்வி கண்டனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2010, ஏப்ரல்,8, தேர்தலில் மூன்று கட்சிகள் மட்டும் அங்கம் வகித்து அந்த தேர்தலில் 14, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.

2011, மார்ச் 17ல் வடமாகாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிச்சபை தேர்தலில், முதன் முதலாக த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE) தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது. இதனை (புளட்) இணைக்கவேண்டாம் எனப் பலர் கூறினர் அப்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பா.அரியநேத்திரன், பொ.செல்வராசா, சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அப்போது தலைவராக இருந்த இரா.சம்மந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா இருவருக்கும் ஆட்சேபனை கடிதம் எழுதி அனுப்பினர். அந்தக் கடிதம் ஊடகங்களிலும் வெளியானது. ஆனால்  சம்மந்தர், மாவை, செல்வம், சுரேஷ் ஆகியோர் புளட் கட்சியை தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைத்தனர்.

இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் நான்கு கட்சிகளாக மாறின. 2013, செப்டம்பர் 22 ல் வடமாகாணசபை தேர்தலில் 2004, ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழர் விடுதலை கூட்டணி ஆனந்தசங்கரி மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.  அதனால் வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ரெலோ, ஈபீஆர்எல்எவ், புளட் ஆகிய ஐந்து கட்சிகள் தமிழத்தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு 30, ஆசனங்களுடன் அமோக வெற்றிபெற்றது.

கொழும்பில் இருந்து அழைத்துவரப்பட்ட நீதியரசர் விக்கினேஷ்வரன் முதலமைச்சராகத் தெரிவாகி, அவர் வசித்த கொழும்பு தலைநகருக்கு சென்று அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஷபக்சவிடம் பதவிப்பிரமாணம் எடுத்தார். இது தவறாறன செயல் என தமிழத்தேசியக் கூட்டமைப்பு உட்பட பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்தசங்கரி போட்டியிட்டபோதும் அவர் வெற்றிபெறவில்லை, தோல்வி கண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தசங்கரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து 2014 இல் மீண்டும் விலகிச்சென்றார்.

ஆனந்தசங்கரியாரின் வரலாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்கனவே 2001 இல் சேர்ந்து 2004லும், 2013, இல் சேர்ந்து 2014லும் இரண்டுதடவைகள் விலகினார். இந்த உண்மை பலருக்கு தெரியாது.

2015, ஆகஷ்ட் 17 இல், பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளட் ஆகிய நான்கு கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில்   போட்டியிட்டு 16, ஆசனங்களைப்பெற்றது. நல்லாட்சி அரசில் எதிர்கட்சி தலைவர் பதவியும் கிடைத்தது, கிழக்குமாகாணசபையில் இணக்கப்பாட்டு அடிப்படையில் சர்வகட்சி ஆட்சியில் நான்குகட்சிகளுடன் இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு பிரதி தவிசாளர் பதவியும் பெற்று கிழக்கு மாகாணசபையில் பங்காளியாக ஆட்சிசெய்தது. சிறீலங்கா முஷ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீது தமிழ்மக்கள் அதிருப்தியடையக் காரணமாக இருந்தது.

2015, இல் நல்லாட்சி அரசில் ஜனாதிபதியாக மைத்திரியும், பிரதமராக ரணிலும் அதிகாரத்தில் இருந்து தேசிய அரசிலும், கிழக்கு மாகாண ஆட்சியிலும் பல கோடி நிதிகள் ஒதுக்கீட்டில் அபிவிருத்திகளையும், பல வேலை வாய்ப்புகளையும், பல சலுகைகளையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கினாலும், தேசிய இனப்பிரச்சினை விடயத்தை தட்டிக்கழித்தும், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கூடிய சந்தர்ப்பங்கள் பல இருந்தும் அதை நம்பவைத்து பிரதமர் ரணில் ஏமாற்றினார். அந்த பிரதேச செயலகத்துக்கு ஒரு புதிய கணக்காளர் நியமிப்பதாக நியமனக்கடிதம் ஒன்றும்  பிரதமர் ரணில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மூலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு அனுப்பிய பின்னர் உடனடியாக அதே பிரதமர் ரணில் அம்பாறை அரச அதிபருக்கு தொலைபேசி மூலமாக கணக்காளரை கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு விடுவிக்க வேண்டாம் என கட்டளை இட்டார். அதனால் கணக்காளர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

எனினும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவம் பிடியில் இருந்த காணிகள் விடுவிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள் சில தடுப்பு என்பன “குரைக்கும் நாய்க்கு தேங்காய் கட்டி கொடுப்பது” போன்று நல்லாட்சி அரசில் நடந்ததை மறுக்கமுடியாது.

2020, ஆகஷ்ட் 10 இல், நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் விலகிச்சென்று  புதிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியுடன் இணைந்து மீன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டது.  அதில் ஏற்கனவே 2013, இல் வடமாகாணசபை தேர்தலில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு, முதலமைச்சர் பதவியில் இருந்து பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து விலகிய சீ.வி.விக்கினேஷ்வரன் பாரளுமன்ற உறுப்பினராக தெரிவானார். ஈபிஆர்எல்எவ் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சுரேஷ்பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் 2020, தேர்தலில் தெரிவாகவில்லை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு 2015, இல் 16, ஆசனங்கள் 2020, இல் 10, ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வழமையாக கிடைக்கும் ஒரு ஆசனம் 2020,இல் முழுமையாக இல்லாமல் போனது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  (2004, ல் தேசிய பட்டியலுடன் 5, ஆசனங்கள்) 2002 தொடக்கம் 2015, வரை தொடர்ச்சியாக மூன்று ஆசனங்கள் கிடைத்துவந்தன. 2020 பொதுத்தேர்தலில் வரலாற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு ஆசனம் குறைந்தது பாரிய தோல்வியாக கருதப்பட்டது.

Leave a Reply