இலங்கையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்

226 Views

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்வதை தடுக்க தேவையான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், 5 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் நேற்று பறிமுதல் செய்ததையும் குறிப்பிட்டு ஸ்டாலின், 2022இல் மொத்தம் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படும் சம்பவங்கள், மீன்பிடியை மாத்திரம் நம்பியுள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. பலவீனமான கடலோரப் பொருளாதாரம் நெருக்கடியை எதிர்கொள்கிறது, அதற்கு எங்கள் ஆதரவு தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வரை 105 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தொடர் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது மீன்பிடி படகுகள் இன்னும் இலங்கைக் காவலில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply