யாழ்.காரைநகர்: மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திற்காக அபகரிக்க முயற்சி- மக்கள் எதிர்ப்பு

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு இன்று திங்கட்கிழமை  வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படுகின்றோம். எங்களது நிலையை கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்கு காணி அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

அண்மையில் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறு இருக்கு நில அளவை திணைக்களத்தினர்  காணி அளவீட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர்.

காரைநகர் பிரதேச செயலர் தமக்கு காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவை திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடருமானால் எங்களது போராட்டங்களும் தொடரும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.