தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கருத்து

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.

அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளரும், முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஜேந்திரகுமார் தலைமையிலான தரப்பினர் வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனையடுத்து இன்னமும் தீர்வுகாணப்படாமல் தொடரும் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கஜேந்திரகுமார் தரப்பு முதலமைச்சரிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியது. அதனை செவிமடுத்த ஸ்டாலின், ‘இவ்விடயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?’ என்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், ‘இந்தியாவுடனும், தமிழகத்துடனும் நெருங்கிய நட்புறவு பேணப்படவேண்டும் எனத் தமிழ்த்தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால் இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் மீனவர் பிரச்சினையினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே நன்மையடைகின்றது. மீனவர் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படாததன் காரணமாக, அதனால் அதிருப்தியுற்ற மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத்தூதரகம் அகற்றப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு புதுடில்லி ஊடாகவே தீர்வுகாணமுடியும் என்றாலும், எமது மீனவர்களைப் போன்றே இந்தியத்தரப்பில் பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆகவே அம்மக்களின் தலைவர் என்ற ரீதியில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு உங்களது நேரடித்தலையீடு அவசியமாகும்’ என வலியுறுத்தினார்.

அதனை செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.