ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்-கண்டிக்கும் தமிழ் ஊடக சங்கம்

354 Views

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் கொடுத்து, நீதியை நசுக்கும் செயற்பாட்டிற்கு வன்மையான கண்டணங்களை தெரிவிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மன்னார் பண்டிவிரிச்சானை சேர்ந்த  சுயாதீன ஊடகவியலாளர் ரஞ்சன் ரவிக்குமாரின் வீடு இனம் தெரியாத நபர்களால் நேற்றையதினம் தாக்கப்பட்டிருந்ததுடன், அருட்தந்தை ஒருவர் தொலைபேசியூடாக அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

மன்னார் கோவில்மோட்டை பகுதியில் விவசாயிகளின் காணியில் ஏற்ப்பட்ட குழப்பநிலை தொடர்பான செய்தியினை சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளரின் வீடு இனம் தெரியாத நபர்களால்

தாக்கப்பட்டதுடன், அருட்தந்தை ஒருவர் தொலைபேசி வாயிலாக குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியும் இருந்தார்.

இது ஊடகவியலாளர்களின் சுதந்திரமான ஈடுபாட்டுக்கு இடைஞ்சலை ஏற்ப்படுத்துவதுடன் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை நசுக்கும் ஒரு செயற்பாடாகவே எமது சங்கம் பார்க்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்பட்டு வந்த குறித்த ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையானது மன்னிக்க முடியாததுடன். அதன் மூலம் உண்மையினையும் நியாயத்தினையும் உறங்கசெய்து விடலாம் என்பது சமூக விரோதிகளின் எண்ணமாக இருக்கின்றது.

அமைதியையும்,சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டிய மதகுரு ஒருவரே வன்முறையினை தூண்டும் விதமாக

தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத, அநாகரிகமான செயலாகவே நோக்கமுடியும்.

தவறுகளை சுட்டிக்காட்டி உண்மைகளை வெளிக்கொண்டுவரும், ஊடகவியலாளர்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் விடுக்கப்படும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அத்துடன் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் அது நாட்டின் சட்டத்தின் ஆட்சியினை கேள்விக்குட்படுத்துவதுடன், ஜனநாயக உரிமையினையும் மறுதலித்து நிற்கின்றது.

இதுபோன்ற அநீதியான சம்பவங்களிற்கு ஊடகவியலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அமைப்பு என்றவகையில் வவுனியாமாவட்ட தமிழ் ஊடகவியலாளர்சங்கம் தனது வன்மையான கண்டனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்து கொள்கின்றது.

அத்துடன் அவரை தொலைபேசியில் அச்சுறுத்திய அருட்தந்தை மற்றும் அவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிற்கான தண்டனையினை பெற்றுக்கொடுப்பதற்கு பொலிசார் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்திநிற்கின்றோம். என்று குறித்த அறிக்கையில் உள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply