யாழ்ப்பாணம் – தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விஹாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், விஹாராதிபதிக்கு பௌத்த கலாசாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழே வழங்கப்படுவதாகவும், அது பாடசாலை உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுவது போன்ற பதவி உயர்வு அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தையிட்டி விஹாரை பிரச்சினையையும் விஹாராதிபதிக்கு வழங்கப்படும் சான்றிதழ் நிகழ்வையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர், குறிப்பிட்டார்.
இதேவேளை, தையிட்டி விஹாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் குறித்து தமது அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
அதற்கமைய, விஹாரைக்குச் சொந்தமான காணிகளை விஹாரைக்கு வழங்குவதற்கும் ஏனைய காணிகளை உரிய மக்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துவருதாகவும் புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.



