அரசாங்கத்தினால் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகள் நாட்டு மக்களை தடுமாற வைத்துள்ளது. விலைவாசி தீவிரமாக அதிகரித்து – வருமானம் அதிகரிக்காத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு புதிய வரிகள் கடுமையான அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. வருமானத்துக்கும் செலவீனங்களுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகியுள்ளது.
இரண்டுவிதமான வரிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிமுகம் செய்திருக்கின்றாா்.
முதலாவது, பொருட்கள், சேவைகள் மீதான சில வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஜீ.எஸ்ரி. 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைவிட புதிய வரிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பொருட்கள் சேவைகளின் விலைகள் அல்லது கட்டணங்கள் ஒக்ரோபா் முதலாம் திகதியிலிருந்து திடீரென அதிகரித்துள்ளது.
இரண்டாவதாக, வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாவை அல்லது அதற்கு அதிகமான தொகையை மாத வருமானமாகப் பெறுபவா்களின் வருமான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொருட்கள் – சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளையில் வருமான வரி அதிகரிப்பால் மக்களுக்கு மாத இறுதியில் கையில் கிடைக்கும் தொகை குறைகின்றது. அதாவது செலவீனங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. மறுபுறம் வருமானம் குறைகின்றது. அதாவது, வருமானத்துக்கும் செலவீனங்களுக்கும் இடையிலான இடைவெளியை இது தீவிரமாக அதிகரித்துள்ளது.
ஒரு லட்சம் ரூபா மாத வருமானம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாதாரண மக்களும் பெறும் வழமையான ஒரு வருமானம்தான். பணவீக்கம் சுமா் 74 சதவீதம் வரையில் அதிகரித்துள்ள நிலையில், ஒரு லட்சம் ரூபாவை மாத வருமானமாகப் பெற்று குடும்பத்தை நடத்துவதே சிரமமம். இந்த நிலையில், அதில் வரி விதிப்பது மக்களை சீற்றமடைய வைத்துள்ளது.
மக்கள் மத்தியில் இந்த வரிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் கொந்தளிப்பான நிலை ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதள்கிழமை இரவு தொலைக்காட்சிகளில் திடீரெனத் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். மக்கள் மத்தியில் உருவாகியுள்ள கொந்தளிப்பைத் தணிப்பதை இலக்காகக்கொண்டதாகவே இந்த உரை இருந்தது.
ரணில் தனது உரையில், தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தினாா். நோயை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் கசப்பான மருந்தை அருந்தத்தான் வேண்டும் என்பதுதான் ரணிலின் கருத்தாக எதிரொலித்தது.
“கடன் மறுசீரமைப்பை வெற் றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. நேரடிவரி வருமானம் 20 வீதத்தைவிட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப் பட்டது. வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை அடைய முடியாதென்பதோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும இழக்க நேரிடும்.
வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. இதைவிட மிகக் கடினமான காலத்தை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்று கடன் மறு சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2019 நவம்பரில் வரிகள் குறைக்கப்பட்டு ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டமையால் சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்க மறுத்தது. அந்த ஆண்டு 700 மில்லியன் ரூபாய் வருமானம் இழக்கப்பட்டது.”
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய வரிக் கொள்கையை நியாயப்படுத்த முற்பட்டிருந்தாலும், திடீரென ஏற்பட்டுள்ள இந்த நிலை மக்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதையிட்டோ, அடிமட்ட மக்களின் நிதி நிலைமை குறித்தோ கவனம் செலுத்தவில்லை.
நெருக்கடியான நிலைமைகளில் கடினமான தீா்மானங்களை அரசாங்கம் எடுப்பது அவசியமானதுதான். ஆனால், இந்த நிலைமைகளுக்கு காரணமானவா்கள் யாா்? அவா்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எதிா்காலத்திலும் இது போன்ற ஒரு நிலை ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? போன்ற கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றன.
இதற்கான பதில் ரணிலிடம் இல்லை. இதற்கான திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காமல் முழுச்சுமையையும் அப்பாவி மக்களின் தலையில் போடுவதையும், அதனை நியாயப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை மக்கள் மத்தியில் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் கூட பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பாகவும், அவ்வாறான குற்றங்களில் சம்பந்தப்பட்டவா்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியல் போக்கில் செல்வாக்கைச் செலுத்துவது இந்தத் தீா்மானத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், இதன்பின்னணியில் இருக்கக்கூடிய யதாா்த்தம் மறுதலித்துவிடக்கூடியதல்ல.
இலங்கையில் உருவாகிய பொருளாதார நெருக்கடிக்கு தனிநபா்கள் சிலருடைய ஊழல் மோசடிகளும், தோ்தலை இலக்காகக்கொண்ட கட்சி சாா்ந்த அரசியலும்தான் காரணமாக இருந்தது. வருமானம் தராத அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், மத்தள விளையதட்டரங்கு என பல மில்லியன் கோடி விரையமாக்கப்பட்டது. இது போன்ற பல திட்டங்கள் தோ்தலை மட்டும் இலக்காகக்கொண்டவையாகவே இருந்தன.
இதனைவிட, தேசிய ரீதியான வரிக்கொள்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டதாக இருக்கவில்லை. தோ்தலை இலக்காகக் கொண்டு வருமான வரியில் பெருமளவு தளா்வுகள் செய்யப்பட்டன. ஜ.எஸ்.ரி. குறைக்கப்பட்டது. சமூக பாதுகாப்பு வரி நீக்கப்பட்டது. வருமான வரியில் பெருமளவு சலுகை வழங்கப்பட்டது.
தமக்கு சாா்பான வா்த்த சாம்ராஜ்யத்தை நடத்தியவா்களின் நலன்களுக்காகவும், சாதாரண வாக்காளா்களைக் கவா்வதற்காகவும் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவினால் இவை செய்யப்பட்டன. பொருளாதார நிபுணா்களின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாமல், தமது சுயநல அரசியலுக்காகவே இதனை அவா்கள் செய்தா்கள்.அதன் பலனைத்தான் நாடு இப்போது அனுபவிக்கின்றது.
இந்த நெருக்கடிக்கு காரணமான அதேநபா்களின் செல்வாக்குக்கு உட்பட்டதாகத்தான் ரணிலின் அரசாங்கமும் உள்ளது. ஆட்சி மாற்றமடைந்திருக்கின்றது என்ற ஒரு தோற்றப்பாடு காணப்பட்டாலும்கூட, அதிகாரம் ஏதோ ஒருவகையில் பழையவா்களிடம்தான் இருக்கின்றது. மோசடி செய்யப்பட்ட, வீண்விரையம் செய்யப்பட்ட நிதியை மீளக் கொண்டுவருவதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. அதற்கு காரணமானவா்கள் யாா் என்பதைக் கண்டறிவதற்கு, அவா்களைத் தண்டனைக்குள்ளாக்குவதற்கோ அரசாங்கம் திட்டமிடவில்லை.
பதிலாக பொருளாதார நெருக்கடியால் நொந்துபோயுள்ள மக்களுக்கு நிவாரணம் எதனையும் வழங்காமல், அவா்களிடம் உள்ளதையும் பிடுங்கும் வகையில்தான் ரணிலின் வரிக்கொள்ளை அமைந்திருக்கின்றது. ரணில் இதனை அலங்கார வாா்த்தைகளில் நியாயப்படுத்தலாம்.
இலங்கை அரசின் அணுகுமுறைகள் காரணமாக சா்வதேச நாணய நிதியம் கைவிரித்துவிட்டது. கடன் மறுசீரமைப்பு தொடா்பில் ஆக்கபுா்வமான திட்டம் ஒன்றில்லாமல் நாணய நிதியத்திடமிருந்து எதனையும் எதிா்பாா்க்க முடியாது. இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் உச்சி மாநாட்டை ஜப்பான் தலைநகரில் நடத்துவதற்கான திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இறுதியாக பாரிஸ் கிளப் கூட்டமும் முட்டுக்கட்டையாகவுள்ளது. இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனாவும், இந்தியாவும் கடன்மறுசீரமைப்புக்கு இணங்காமையால் பாரிஸ் கிளப் கூட்டம் ஸ்தம்பிதமாகியுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கக்கூடிய கடனுதவிகள் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில்தான், இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கின்றது.
அதேவேளையில், செலவிலும், வருமானத்திலும் அதிகளவு வரிகளை விதிப்பதன்மூலமாக அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது ரணிலின் உபாயமாகவுள்ளது. ஆனால், மக்கள் வறுமைகாரணமாக ஏற்கனவே செலவீனங்களை குறைத்துள்ளாா்கள். இதனால் வரிகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டும் எதிா்பாா்த்த வருமானத்தை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாது.
வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் தடைகள் தொடரத்தான் போகின்றது. அரசாங்கம் ஸ்திரமானதாக இல்லை. பொருளாதாரக் குற்றங்களில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருப்பதும் சா்வதேச சமூகத்தால் ஏற்கக்கூடியதாகவில்லை. இந்தப் பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கான தீா்வு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை. இதனால், ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாட்டு மக்களுக்கான தனது உரையில் தெரிவித்திருப்பதைப் போல, ”இதைவிடவும் மிகக் கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.“
ரணில் மீது மொட்டு சவாரி செய்யும் நிலையில் ரணிலை நம்பி வெளிநாடுகள் உதவிகளை வாரி வழங்கப்போவதில்லை. மொட்டுவைப் பொறுத்தவரையில் பாரிய கண்டம் ஒன்றிலிருந்து தப்பியாயிற்று. ரணிலை வைத்து அரசியலரங்கில் மீண்டும் புத்துயிா் பெறுவது என்ற நிலைப்பாட்டில் பலமாகச் செல்கின்றது. ரணிலைப் பொறுத்தவரை மொட்டுவின் பாராளுமன்ற பலம் அவருக்குத் தேவை. இந்த நிலையில், ஆரம்பித்த இடத்தை நோக்கித்தான் இலங்கை மீண்டும் சென்றுகொண்டிருக்கின்றதா?