காலை உணவு இன்றி மயங்கி விழும் மாணவர்கள்- இலங்கை தேசிய அதிபர்களின் சங்கம் சுட்டிக்காட்டு

பாடசாலை மாணவர்களின் வருகை 30 –40 வீதத்தால் குறைந்துள்ளதாக அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால், பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை தேசிய அதிபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாகப் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏராளமாக இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக பிரபல பாடசாலைகளில் இருந்து பிள்ளைகளை விலக்கி அருகில் உள்ள பாடசாலைகளில் சேர்க்கும் வீதம் அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் பாடசாலை காலை கூட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மயங்கி விழுவதாகவும் விசாரணையில் அவர்கள் சாப்பிடாமல் வந்திருப்பது தெரியவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 60% பாடசாலை மாணவர்கள் மதிய உணவை எடுத்து வருவதில்லை எனவும் தெரிவித்த செயலாளர், போக்குவரத்து பிரச்சினையால் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.