‘போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வட மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என சமூக மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள சமூக மட்ட அமைப்புக்கள் கடந்த கால அரசுகள் அது தொடர்பில் கவனமெடுக்க விரும்பாமல் இருந்தன எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போதைய அரசு போதைப்பொருள் ஒழிப்பில் கூடிய கரிசனையை கொண்டுள்ளது. தெற்கில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் போதைப்பொருள் தொடர்பான கைதுகள் முன்னெடுக்கப்பட்டாலும், போதைப்பொருள் பரவலின் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவதுடன், போதைப்பொருள் வலையமைப்புக்களை முற்றாக ஒழிக்கும் வகையிலான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வட மாகாணத்தில் போதைப்பொருள் அபாய வலயங்களாக உள்ள பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், பாடசாலை மாணவர்கள், உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து நடக்கும் போதைப்பொருள் விற்பனைகளை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வட மாகாணத்தில் கூடுதலான அவதானம் செலுத்தி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக மட்ட அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.



