சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமகால மீளாய்வு அறிக்கை, இலங்கையால் நிராகரிப்பு

இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சமகால மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பெருமளவிலான விடயங்களை நிராகரிப்பதாக மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

எந்தவொரு பிரஜைக்கும் கருத்துக்களை வெளியிடுதல் மற்றும் அமைதியான கூட்டங்களை நடத்துவதற்கான உரிமை இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளதென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிடத் தூதுவர் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை கவுன்ஸிலின் 53 ஆவது கூட்டத் தொடரின் 29 ஆவது அமர்வு நடைபெற்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இலங்கை தொடர்பிலான சமகால மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை, 2023 ஆம் ஆண்டு நாட்டின் 75 வருட சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் பொருளாதார நிலையான தன்மை தொடர்பில் சாதகமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வருடமாக இந்த வருடத்தை குறிப்பிட முடியும் அத்துடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும்நல்லிணக்கம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகுமென்பதையும் இலங்கை தூதுவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக இலங்கை தொடர்பில் 294 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த அனைத்து பரிந்துரைகள் மீதும் அரசாங்கம் உன்னிப்பான கவனத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஹிமாலி அருணதிலக, இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் தேசிய ரீதியாகவும் மற்றும் அரசியலமைப்பின் மூலமும் தேசிய கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி அறிக்கை, சர்வதேச ரீதியில் இலங்கை சுயாதீனமாக இணைந்துள்ள பொறுப்பு வரைபுக்கு முரணாக இல்லையென்பதை சிந்திக்கவேண்டும் என்பதுடன் அதில் 173 பரிந்துரைகளுக்கு இலங்கை பாராட்டு தெரிவிப்பதாகவும் ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 115 பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எனினும் மனித உரிமை கவுன்ஸிலில் யோசனையுடன் சம்பந்தப்பட்ட 06 பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தாது என்றும் அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாகவும் இலங்கைக்கு பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள அனைத்து பரிந்துரைகள் சம்பந்தமாக பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.