மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள இலங்கையின் முன்னைய அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இந்த திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டங்களுக்காக ரணில் அரசு வழங்கியுள்ள மின்சார கொள்முதலுக்கான ஒப்புதலில் முரண்பாடுகள் இருப்பதாக கூறியதோடு, நவம்பர் 14ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்அதானி நிறுவனத்துடனான காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதே நேரம் இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தனது தேர்தல் பரப்புரையின் போது அதானியின் காற்றாலை திட்டம் இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதுடன், தமது அரசாங்கத்தில் அதானி உடனான ஒப்பந்தத்தை இரத்து செய்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
