இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும்-உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர்

226 Views

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சியோ கந்தா, இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சியோ கந்தா, சிரேஷ்ட மூலோபாய மற்றும் செயற்பாட்டு அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுக்குழுவினருக்கு விளக்கிய பிரதமர், புதிய சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான நிதி ஏற்பாடுகளை முன்கூட்டியே முடிவுசெய்ய வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலைமையை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள  குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த உலக வங்கியின் பணிப்பாளர், இடைக்கால மற்றும் நீண்டகால முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாகவும் உறுதியளித்தார்.

Leave a Reply