உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை

உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி இலங்கை மருத்துவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த சத்திர சிகிச்சை கடந்த (01.06.2023) திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல் 13.372 சென்றி மீற்றர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரான கின்னஸ் உலக சாதனைகளின் படி, உலகில் இரண்டு மிகப்பெரிய சிறுநீரகக்கற்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் 2004 இல் இந்தியாவில் அகற்றப்பட்ட 13 சென்றிமீற்றர் உடைய கல் மற்றும் 2008 இல் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் எடை கொண்ட கற்கள் இடம்பிடித்திருந்தன.

எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கற்களை விடவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கல் பெரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையை சிறுநீரக சத்திர சிகிச்சை மருத்துவர் , கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீர் பிரிவின் தலைவர், வைத்தியர் டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் வைத்தியர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் வைத்தியர் சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் மயக்க மருந்து நிபுணர்களாக பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது