அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த மார்ச் 6ம் திகதி நடந்த இப்போராடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள், ஆப்கானிஸ்தான், பிஜி, ஈராக், மலேசிய-இந்திய பின்னணிக் கொண்ட பல நாட்டு அகதிகள் பங்கேற்றிருக்கின்றனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அகதியான பிரசாந்த் மூன்று மாதங்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்தவர். அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலுக்கு எதிராக போராடிய பிரியா- நடேசலிங்கம் குடும்பத்தை சுட்டிக்காட்டிய பேசிய பிரசாந்த், “அவர்கள் போராடினார்கள், அதன் மூலம் என்ன மாற்றம் ஏற்பட்டது என நம் அனைவருக்கும் தெரியும். ஆஸ்திரேலிய அரசு அவர்களை
(இலங்கைக்கு) நாடுகடத்த முயற்சித்தது. எப்படி அதை நிறுத்தினோம்? போராட்டத்தின் மூலமே அதை செய்தோம்,” எனக் கூறியிருக்கிறார்.
“நாங்கள் அல்பனீஸ் (அவுஸ்திரேலிய பிரதமர்) அவர்களின் கதவைத் தட்டி, அவர் என்ன உறுதியளித்தார் என்பதை நினைவுப்படுத்த கூடியுள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் பிஜி நாட்டைச் சேர்ந்த அகதியான ரூபெனி. அண்மையில், தற்காலிக விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை அவுஸ்திரேலிய அரசு ஏற்படுத்திய போதிலும் நிச்சயத்தன்மையற்ற சூழலில் சிக்கியுள்ள மேலும் 12 ஆயிரம் அகதிகள் தொடர்பாக எந்த முடிவினையும் அரசு தெரிவிக்கவில்லை. அவ்வாறு சிக்கியுள்ள 12 ஆயிரம் அகதிகளில் பிஜி அகதியான ரூபெனியும் ஒருவராவார்.
கடந்த 2013ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த முகமது எனும் ஈராக்கிய அகதி இதுவரை விசாவைப் பெறுவதற்கான சட்ட செலவுகளுக்கு 35 ஆயிரம் டொலர்களை செலவழித்திருக்கிறார். அதே படகில் வந்த பிறருக்கு விசா கிடைத்த போதிலும் அவருக்கு விசா வழங்கப்படாத நிலையை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என முகமது கூறியிருக்கிறார்.
இந்த சூழலில், நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள 12 ஆயிரம் அகதிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது. இந்த அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பினை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.