இலங்கை: வன்முறை வன்முறைக்கு தீர்வாகாது

323 Views

இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு உக்கிரமடைந்திருக்கின்றது. பிரதமர் மஹிந்தவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்க உருவாக்கம் தொடர்பில் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன. எனினும் இது இன்னும் சாத்தியமாகாத நிலையில் பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்றும்  ஊரடங்கு அமுலில் இருந்த போதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இலங்கை இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது. தூரநோக்கற்ற ,சுயநலம் கருதிய, ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றனர்.நாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக சர்வதேச ரீதியில் கடன்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தம்மை அபிவிருத்தி செய்து கொண்டார்களே தவிர நாட்டுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்பட்டதா? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஊழல் மிக்க ஆட்சி இன்று இலங்கை மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.இதன் எதிரொலியே இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வழியினை இடைமறித்து இளைஞர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ஊழல்வாதிகள் எவரும் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த இளைஞர்கள் விமான நிலையத்திற்குள் உள் நுழையும் வாகனங்களை பரிசீலிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அழைத்து நாட்டின்  பொருளாதாரம் உட்பட சமகால நிலைமைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடி இருக்கின்றார். இதுேவேளை நாட்டின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி இன்று மாலை பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடி இருக்கின்றார்.

அதே நேரம் மதகுருமார்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய பலரும் வன்முறைகளை கைவிடுதல்  மற்றும் ஜனநாயக உறுதிப்பாட்டின் அவசியம் என்பன குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Tamil News

Leave a Reply