இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-சபா குகதாஸ்

இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவில் என்றுமில்லாத வகையில் சீனாவின் உட் பிரவேசம் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கேள்விக்குள்ளாக்கும் என்ற அபாயம் உருவாகி வருகின்றது. காரணம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் கடந்த காலங்களை விட ஏற்பட்ட பாரிய மாற்றம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்தகாலங்களில் அணிசேராக் கொள்கையின் கீழ் இந்திய மேற்குலக நாடுகளை அனுசரித்த வெளியுறவுக் கொள்கையில் இருந்தனர் ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சீன சார்புக் கொள்கையை முதன்மைப் படுத்தியுள்ளனர். இதனால் இந்திய அமெரிக்க நாடுகள் இலங்கை தொடர்பாக புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தி உள்ளது  என இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட பலர் வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். .

அந்த வகையில் இலங்கையின் செயற்பாடுகளை அவதானிப்பதாக தற்போது சிறிது காலமாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தலைவர்கள் கூறி வருகின்றனர் அவர்களின் உரைகளின் வெளிப்பாடு இந்தியா இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் ஈடுபட்டுள்ளது என்பதை உணர முடிகின்றது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மத்திய அரசை முழுமையாக தாம் கையாள வேண்டும் என்ற வகையிலேதான் நகர்வுகள் இருக்கின்றன. தமிழர் விடையத்தை அரசியல் அழுத்தங்களுக்கு இடை இடையே உச்சரிப்பதாகவே உள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்கள் பக்கம் இலங்கை அரசாங்கத்தை வளைத்துப் போடும் வியூகத்தில் அழுத்தங்கள்,திட்டங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தென்னிலங்கையில் இருந்து தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு நோக்கி மிக வேகமாக நகர்த்தப்படுகின்றன இத் திட்டங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப் பட்டதுடன் சீன தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதுடன் சீன நிறுவனங்களின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாறுவதால் நீண்ட காலத்தில் தமிழர்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவிடம் பெற்ற நீண்டகாலக் கடன்கள் 99 வருட குத்தகைத் திட்டங்கள் யாவும் நான்கு தலைமுறைக்கு சீனர்களை இலங்கைத் தீவில் நிலைபெறச் செய்யவுள்ளது.

இவ்வாறு சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பெரும் தலை வலியாக மாறி உள்ளமையால் இலங்கை அரசுடன் இணைந்து பயணிக்கும் வியூகங்களையே இந்திய நகர்த்த ஆரம்பித்துள்ளது உதாரணமாக கடந்த மாதம் இலங்கை இந்திய வர்த்தக உறவுகளை விரிவாக்குதல் தொடர்பான மெய்நகர் உரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடையங்கள்.

எனவே சீனாவின் இலங்கை மீதான அகலக்கால் பதிப்பு எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களின் மறுக்கப்பட்ட அரசியல் அபிலாசைகள் சிதைத்துவிடும் அபாயநிலை உள்ளது” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-சபா குகதாஸ்

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-சபா குகதாஸ்