எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

இந்தியாவிற்கான இலங்கை  தூதுவர் மிலிந்த மொரகொட, இந்தியாவின்  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை   சந்தித்து  கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான அவசர விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். புதுடெல்லியில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம், இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான சவால்கள் மற்றும் மக்கள் படும் கடுமையான இன்னல்கள் குறித்து அமைச்சர் பூரிக்கு தூதுவர் மொரகொட விளக்கமளித்துள்ளார்.

தற்போது இலங்கைக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகங்களை அவசரகால அடிப்படையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பூரியுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் பூரி இது தொடர்பாக சாதகமாக பதிலளித்ததுடன், இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என தூதுவருக்கு உறுதியளித்துள்ளார்.

Tamil News