ஆசிய கிளியரிங் யூனியன் (ACU) அமைப்பு மூலம் இலங்கையுடனான பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கி கடந்த வாரம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புக்கள் மற்றொரு அடியை சந்தித்துள்ளன.
ஆசிய கிளியரிங் யூனியன் அமைப்பின் ஊடாக இலங்கையுடனான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி, தமது நாட்டின் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய கட்டளையின்படி, எந்தவொரு பங்களாதேஷ் வங்கியும் இலங்கை வர்த்தக வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்ய விரும்பினால், ஆசிய கிளியரிங் முறைமையைப் புறக்கணித்து மேற்கொள்ளலாம்.
இலங்கையின் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பங்களாதேஷ் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதற்கு இலங்கையின் மத்திய வங்கி அதிக கால அவகாசம் கோரியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை வங்கியாளர்களை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கமான மூன்று மாத கால அவகாசத்தின் போது, பங்களாதேஷ் வங்கிகளுக்கு (பெரும்பாலும் இலங்கையால் வாங்கப்படும் பொருட்களுக்கு) செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உள்ளூர் வங்கிகள் செலுத்துவதற்கு உதவுவதற்கு, இலங்கையின் மத்திய வங்கியின் தாமதம் இந்த முடிவில் முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம்.
ஆசிய கிளியரிங் யூனியன் (ACU) என்பது ஒரு தீர்வைச் செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் அல்லது கடன் வழங்கப்படும் ஒரு தளமாகும்.
இலங்கை தனது நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். இதன்மூலம், இலங்கையின் வங்கிகள் பங்களாதேஷில் பணம் செலுத்த வேண்டியிருந்தால், மத்திய வங்கியில் இருந்து டொலர்கள் மூலம், கடனுக்கான எந்த ஆதாரமும் இல்லாமல், பணமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து பங்களாதேஷ் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கு உடனடியாக பணம் கிடைக்கச் செய்யும் என்று உள்ளூர் வங்கியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவிடமிருந்து பெறப்பட்ட, வர்த்தகம் செய்ய முடியாத 1 பில்லியன் டொலர் கடனை உள்ளடங்களாக இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு 1.717 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் வங்கி இவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவித்துள்ளது.