இலங்கை-வரவு – செலவு திட்டம் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள் வேறுபட்ட நிலைப்பாடுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கிடையில் இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து புதிய இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது தற்போதைய நிலையில் பொருத்தமானதாக அமையும் என பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் பல சந்தப்புக்கள் கட்சி மட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமையாது, பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் அமையும் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போது ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிலையான அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள். அத்துடன் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.கட்சி மறுசீரமைப்பிற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது பொருத்தமானதாக அமையும் என பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி பொதுஜன பெரமுன மீதான மக்கள் வெறுப்பை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளதாக அறிய முடிகிறது.