காவல்துறை கட்டளைச் சட்ட பயன்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவல்துறை கட்டளை சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுத்து மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 14 (1) அ, மற்றும் ஆ சரத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், காவல்துறை கட்டளைச் சட்டத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை அனைத்து பிரஜைகளுக்கும் உள்ளதென, குறித்த சர்த்துகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டியே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.