கடன் வழங்கிய நாடுகளிடம் இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை

232 Views

கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கை பெருமளவிலான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுல்ளதால் அது பற்றியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் சீன நிதி அமைச்சருடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய பிரதான மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், இந்த பேச்சுவார்த்தைகளை  கடந்த 15ம் திகதி ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு கருத்துரைத்த போதே இந்த விடயங்களை தெளிவூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply