அரசியல் தீர்வை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இலங்கை எட்டவில்லை -ஐ.நாவில் இந்தியா கருத்து

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என இந்தியா அந்த கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்றும் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.